2017-12-30 15:18:00

கர்தினால் கோக் : மதத்தின் சகோதரி அமைதி


டிச.30,2017. மதத்தின் சகோதரி அமைதி மற்றும், வன்முறை, எந்த வழியிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது என்று, கிறிஸ்மஸ் சொல்கின்ற செய்தியை, நாம் உலகெங்கும் பரப்ப வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

‘2017ம் ஆண்டில் கிறிஸ்தவ ஒன்றிப்பு’ என்ற தலைப்பில், SIR செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் கர்ட் கோக் அவர்கள், உலகெங்கும் கிறிஸ்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்படுவதற்குரிய காரணங்களை விளக்கினார்.

கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும், பிற கிறிஸ்தவ சபையினர் என்பதற்காக அல்ல, அவர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே கொலை செய்யப்படுகின்றனர் என்றும், அவர்களின் குருதி, கிறிஸ்தவர்கள் அனைவரையும் இணைக்கின்றது என்றும், விண்ணகத்திலுள்ள இந்த மறைசாட்சிகள், இவ்வுலகில் நாம் தேடும் ஒன்றிப்பை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர் என்றும், கர்தினால் கோக் அவர்கள் கூறினார்.    

2017ம் ஆண்டு, கிறிஸ்தவ சபைகளுக்கிடையே நல்ல உறவுகளையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளையும் கொண்டு, புதிய கூறுகளுக்கு வழியமைத்துள்ளது எனினும், சமயத் தீவிரவாதம் என்ற பெயரில், இந்த ஆண்டு, இப்பூமியின் பல்வேறு பகுதிகளில், கிறிஸ்தவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர் என்றும் கவலை தெரிவித்தார், கர்தினால் கோக்.   

டிசம்பர் 17ம் தேதி, திருவருகைக் கால மூன்றாம் ஞாயிறன்று பாகிஸ்தானின் குவெட்டாவில், மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயம், ஐ.எஸ்.ஐ.எஸ். ஆட்களால் தாக்கப்பட்டது, மிகவும்  துயரம் தந்த செய்தி என்றுரைத்த கர்தினால் கோக் அவர்கள், மதத்தின் சகோதரி அமைதி என்ற செய்தியை, கிறிஸ்மஸ் நமக்கு வழங்குகின்றது என்று கூறினார்.

வன்முறையை, எந்த வழியிலும் நியாயப்படுத்த முடியாது என்ற செய்தியையும், கிறிஸ்மஸ் நமக்கு உணர்த்துகின்றது என்றும் உரைத்தார், கர்தினால் கோக்.

ஆதாரம் : SIR/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.