2017-12-30 15:44:00

சிறார் தொழில்முறைக்கு எதிராக ஜெர்மனியின் சிறார் இசைக்குழு


டிச.30,2017. ஜெர்மன் நாட்டின் கத்தோலிக்க பாலர் சபை கழகத்தின் பல்லாயிரக்கணக்கான பாடகர்கள், இவ்வெள்ளியன்று நடத்திய இசை நிகழ்வில், இந்தியாவிலும், உலகெங்கிலும் இடம்பெறும் சிறார் தொழில்முறைக்கு எதிராக ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கு உறுதி எடுத்தனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

ஜெர்மனியின் Trier நகரில், தங்களின் அறுபதாவது ஆண்டு நிகழ்வை, டிசம்பர் 29, இவ்வெள்ளியன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்த, "Star Singers" என்ற இசைக்குழுவினர், 2018ம் ஆண்டில், சிறார் தொழில்முறைக்கு எதிராகச் செயல்படத் தீர்மானித்தனர். இந்நிகழ்வில் 2,600க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

"சிறார் தொழில்முறைக்கு எதிராக ஒன்று சேர்ந்து" என்ற சுலோகத்துடன் இந்நடவடிக்கையை ஆரம்பித்துள்ள இந்த இசைக்குழுவினர், இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில், மூன்று கீழ்த்திசை ஞானிகள் போன்று உடையணிந்து, ஜெர்மனியில் வீடுகளைச் சந்தித்து, நிதி திரட்டி வருகின்றனர்.

ஜெர்மனியின் அனைத்துப் பங்குத்தளங்களைச் சேர்ந்த, இந்த இசைக்குழுவின்  ஏறத்தாழ மூன்று இலட்சம் சிறார், "கிறிஸ்து இந்த வீட்டை ஆசீர்வதிக்கிறார்" என்று எழுதப்பட்ட அட்டைகளுடன் வீடுகளைச் சந்தித்து, உலகெங்கும் துன்புறும் தங்களையொத்த வயதுடைய சிறாருக்கென நன்கொடைகளைச் சேகரித்து வருகின்றனர்.

"Star Singers" என்ற இந்த இசைக்குழுவின் இந்நடவடிக்கை பற்றிப் பேசிய, பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவர், பேராயர் Giampietro Dal Toso அவர்கள், மிகவும் சுவாரஸ்யமான இந்நடவடிக்கை, அகில உலக திருஅவைக்கும் முக்கியமானது என்று, கூறினார். விண்மீன் பாடகர்கள் என்ற இந்த இசைக்குழுவினர், இயேசுவைக் காண உதவிய விண்மீனைப் பின்செல்கின்றனர் என்றும், அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்றும் கூறினார், பேராயர் Toso. 

"Star Singers" ("Sternsingen"), யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தில், முக்கியமான அங்கம் வகிக்கின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

உலகில், 5 வயதுக்கும், 17 வயதுக்கும் உட்பட்ட 16 கோடியே 80 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர். இவர்கள் உலக சிறார் தொகையில் 11 விழுக்காடாகும் என்று உலக தொழில் நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.