2017-12-30 14:51:00

திருக்குடும்பத் திருநாள் - ஞாயிறு சிந்தனை


இன்னும் சில மணி நேரங்களில், 2017ம் ஆண்டு விடைபெற்றுச் செல்லும்; புதிய ஆண்டு, துவங்கும். முடிவுற்ற ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கவும், புலரவிருக்கும் புத்தாண்டை முன்னோக்கிப் பார்க்கவும், ஊனக்கண்கள் மட்டும் போதாது, நம்பிக்கையுடன் கூடிய உள்ளக்கண்களும் தேவை என்பதைப் புரிந்துகொள்ள, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

முடிவுறும் இந்த ஆண்டை, பின்னோக்கிப் பார்ப்பதில், கடந்த சில நாட்களாக, ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஊடகங்களின் பின்னோக்கியப் பார்வை, இவ்வுலகைக் குறித்த ஓர் அயர்வையும், சலிப்பையும் உருவாக்குகின்றது. 'சே, என்ன உலகம் இது' என்று, நமக்குள் உருவாகும் சலிப்பு, நம் உள்ளங்களில் நம்பிக்கை வேர்களை அறுத்துவிடுகிறது.

நம் சலிப்பையும், மனத்தளர்ச்சியையும் நீக்கும் மருந்தாக, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்பிக்கையைப் பற்றி பேசுகின்றன. பிள்ளைப்பேறின்றி தவித்த ஆபிரகாமிடம், "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" (தொ.நூ. 15:5) என்று, ஆண்டவர் வாக்களிக்கிறார்.

வயது முதிர்ந்த காரணத்தால், உடலளவிலும், பிள்ளைப்பேறு இல்லையே என்ற ஏக்கத்தால், மனதளவிலும், தளர்ந்திருந்த ஆபிரகாமைக் குறித்து எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கூறும் சொற்களும் நம்பிக்கையைப் பற்றி வலியுறுத்துகின்றன:

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். (எபிரேயர் 11: 11)

நம் நம்பிக்கைக்குத் தேவையான ஓர் அடித்தளம், பரந்து, விரிந்த கண்ணோட்டம் என்பதை, இன்றைய முதல் வாசகம் சொல்லித்தருகின்றது. தனக்கு வாரிசு இல்லை என்பதால் மனமுடைந்து, நம்பிக்கையிழந்து தவித்த ஆபிரகாமை, 'ஆண்டவர் வெளியே அழைத்து வந்து, வானத்தை நிமிர்ந்து பார்க்கும்படி கூறினார்' (தொ.நூ. 15:5) என்று தொடக்கநூல் வாசகம் கூறுகிறது. அத்தகையதோர் அழைப்பு, நமக்கும் வழங்கப்படுகிறது, குறிப்பாக, ஆண்டின் இறுதி நாளன்று. கடந்து செல்லும் ஆண்டைக்குறித்து ஊடகங்கள் சொல்லும் எண்ணங்கள், நம் நம்பிக்கையை வேரறுக்கும்போது, இறைவன் நம்மை வெளியே வரச் சொல்கிறார்; வானத்தை நிமிர்ந்து பார்க்கும்படி கூறுகிறார்.

ஆண்டின் இறுதி நாளில் இருக்கும் நாம், பரந்து விரிந்த வானத்தின் மீதும், பரந்த உள்ளம் கொண்ட நல்லவர்கள் மீதும், நம் பார்வையைப் பதிக்க, இறைவன் நமக்கு சிறப்பான வரமருள செபிப்போம். நல்லவற்றை, நம்பிக்கை தருவனவற்றை, உள்ளத்தில் பதிக்கும் ஒரு முயற்சியாகத்தான், ஆண்டின் இறுதி நாளன்று, 'இறைவா, உம்மைப் போற்றுகிறோம்' என்ற பொருள்படும்,  'தே தேயும்' (Te Deum) என்ற நன்றிப் பாடலைப் பாடும்படி, தாய் திருஅவை நம்மை அழைக்கிறது.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடரும் ஞாயிறன்று, திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுகிறோம். டிசம்பர் 31, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்பத் திருவிழாவில், நமது நம்பிக்கை உணர்வுகளின் நாற்றங்காலாய் விளங்கும் குடும்பத்தை எண்ணிப்பார்க்க திருஅவை நமக்கொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

2004ம் ஆண்டு, டிசம்பர் 26, ஞாயிறு, திருக்குடும்பத் திருநாளன்று, இந்தியா, இலங்கை உட்பட, பல ஆசிய நாடுகளின் கடற்கரைப்பகுதிகளைத் தாக்கிய சுனாமி, நம் நினைவுகளில் நிழலாடுகின்றது. இந்த சுனாமி, பல இலட்சம் குடும்பங்களைச் சிதைத்தது. அழிவையும், கண்ணீரையும் கொண்டு வந்தது. அந்த அழிவையும், கண்ணீரையும் தொடர்ந்து வந்த நாட்களில், பல்லாயிரம் புதுமைகளும் நடந்தன. இந்தப் புதுமைகளில் ஒரு சில, ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால், பல்லாயிரம் புதுமைகள், செய்திகளாய் வெளிவராமல், செயல் வடிவம் பெற்றன என்பதும் உண்மைதான். சுனாமி என்ற பேரழிவைத் தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளில் வெளிவந்த நம்பிக்கை தரும் பல செய்திகளில், என் மனதில் ஆழமாய்ப் பதிந்த ஒரு செய்தி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப் பற்றியச் செய்தி.

தங்கள் குழந்தைகள் மூவரையும் சேர்த்து, குடும்பத்தில் பத்து பேரை, சுனாமியில் இழந்தவர்கள், பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியர். டிசம்பர் 26, பரமேஸ்வரனின் பிறந்த நாள். நாகப்பட்டினம் கடற்கரையில் தன் பிறந்தநாளைக் கொண்டாட, மூன்று குழந்தைகளுடனும், ஏழு உறவினர்களுடனும் சென்றார் பரமேஸ்வரன். அவ்வேளையில் வந்த சுனாமி, அவரது மூன்று குழந்தைகளையும் மற்ற உறவினர்களையும் கடலுக்கு இரையாக்கியது.

குழந்தைகளை இழந்தபின்னர், வாழ்வதில் பொருளில்லை என்று, பரமேஸ்வரன் அவர்கள், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தபோது, அவரது மனைவி, சூடாமணி அவர்கள், மாற்றுவழியைக் காட்டினார். நம்பிக்கையிழந்து, வெறுப்புடன் இவ்வுலகிலிருந்து விடைபெறுவதற்குப் பதில், ஒரு புதுமையை அவர்கள் ஆரம்பித்தனர்.

அந்தச் சுனாமியால் பெற்றோரை இழந்து தவித்த 16 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். குழந்தைகளின் சாதி, மதம், இவற்றையெல்லாம் கடந்து, மனித நேயம் என்ற அடிப்படையில் மட்டுமே குழந்தைகளைத் தத்தெடுத்தனர். 16 குழந்தைகளுடன், 'நம்பிக்கை' என்ற பெயருடன் ஆரம்பமான இக்குடும்பத்தில், இன்று 37 குழந்தைகள் உள்ளனர். ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இதுவும் ஒரு திருக்குடும்பம் தானே!

திருக்குடும்பத் திருநாள், சுனாமிப் பேரழிவு இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது, கத்தோலிக்கத் திருஅவையில், திருக்குடும்பத் திருநாள் உருவானதற்கு, அழிவுகளே முக்கிய காரணமாயின என்ற வரலாறும், நம் நினைவில் நிழலாடுகிறது.

பல நூற்றாண்டுகளாக, தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக, துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு வந்த திருக்குடும்பத் திருநாளை, 1893ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், திருஅவையின் திருநாளாக அறிமுகப்படுத்தினார். ஒரு சில ஆண்டுகளில், திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்ட இத்திருநாள், 1921ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், மீண்டும், திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அதுதான், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரில், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ, போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள், ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில், திருக்குடும்பத் திருநாளை, மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப திருஅவை முயன்றது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், அன்றைய உலகின் நிலை. இரண்டாம் உலகப் போரின் காரணமாக, கட்டடங்கள் சிதைந்தது உண்மைதான். ஆனால், அவற்றைவிட, குடும்பங்கள் அதிகமாகச் சிதைந்திருந்தன... வேறு பல வடிவங்களில், குடும்பங்கள், தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று, பல வழிகளில் உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலை குலைந்தது. ‘ஹிப்பி’ கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள், வீட்டுக்கு வெளியே, நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த அமைதியை, அன்பை, வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது, திருஅவை. குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருநாளாக, திருஅவை அறிவித்தது.

உலகப் போர்களாலும், உலகப் போக்குகளாலும் அழிவைத் தேடி, இவ்வுலகம் சென்ற வேளையில், இந்த அழிவுகளை, கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பதற்குப் பதிலாக, எல்லாம் அழிந்தது என்று, மனம் தளர்ந்து போவதற்குப் பதிலாக, மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு வழிகாட்டியது, கத்தோலிக்கத் திருஅவை. அந்த வழிகாட்டுதலின் ஒரு பகுதிதான், நாம் இன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருநாள்.

இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பத்தைப் பற்றி இப்போது பெருமையாக, புனிதமாக நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த நேரத்தில் அக்குடும்பத்தைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும், புனிதமாக, பெருமை தருவதாக இல்லையே! பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடிரவாக அவர்கள் வேறொரு நாட்டிற்கு அகதிகளாய் ஓட வேண்டியிருந்தது. நாட்டிற்குள்ளும், அடுத்த நாடுகளுக்கும், இரவோடிரவாக ஓடும் அகதிகளின் நிலை, இன்றும் தொடரும் துயரம்தானே!

பச்சிளம் குழந்தை இயேசுவோடு, மரியாவும், யோசேப்பும் எகிப்துக்கு ஓடிப்போன நேரத்தில், அக்குழந்தையை அழித்துவிடும் வெறியில், ஏரோதின் அடியாட்கள் பல நூறு குழந்தைகளின் உயிர்களைப் பலி வாங்கினர். ஏரோதுகளின் சுயநல வெறிக்கு, குழந்தைகள் பலியாவது இன்றும் தொடரும் அவலம்தானே!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய மேல்மாடத்திலிருந்து வழங்கிய 'Urbi et Orbi' எனப்படும், 'ஊருக்கும் உலகுக்கும்' சிறப்புச் செய்தியில், குழந்தைகளைப் பற்றிய தன் எண்ணங்களை அழுத்தந்திருத்தமாக வெளிப்படுத்தினார்.

போர்களும், வளர்ச்சி என்ற பெயரால், அழிவுகளும் இடம்பெற்றுவரும் இன்றைய உலகில், குழந்தை இயேசுவைப்போல், இடமின்றி தவிக்கும் குழந்தைகளின் முகங்களில், இயேசுவைக் காண, இன்றைய கிறிஸ்மஸ் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

எங்கெல்லாம், அமைதியும், பாதுகாப்பும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோ, அங்குள்ள குழந்தைகளின் முகங்களில், இயேசுவைப் பார்ப்போம்.

வேலையின்மையால், தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான, அமைதி நிறைந்த ஒரு எதிர்காலத்தை அமைத்துத் தர முடியாத பெற்றோரின் குழந்தைகளில், இயேசுவைப் பார்ப்போம்.

தங்கள் நாட்டை விட்டு தனியாக வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குழந்தைளில், வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைளில், இயேசுவைக் காண்போம்.

கிறிஸ்மஸ் காலம், குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய காலம் என்றாலும், குடும்பமாகக் கூடி வாழ முடியாதவர்களையும் அது நமக்கு நினைவுறுத்துகிறது. கிறிஸ்மஸைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் குடும்பங்கள், திருக்குடும்பத்திலிருந்து ஆறுதல் பெறமுடியும். யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவுடன் முதல் கிறிஸ்மஸை, கொண்டாடியதாகத் தெரியவில்லை. கொண்டாட்டங்களைவிட, கொடுமைகளையே அவர்கள் அதிகம் அனுபவித்தனர் என்பதுதான் உண்மை.

தங்களைச் சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி, புனிதத்தையும் பெருமையையும் நிலைநாட்டிய மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு, அந்தக் குழந்தைக்காக உயிர் துறந்த மாசில்லாக் குழந்தைகள், ஆகிய இவர்களால்தான், கிறிஸ்மஸ் காலம் ஒரு கொண்டாட்டமாக மாறியுள்ளது.

மலை போல, சுனாமி அலை போல, துயர் வந்தாலும், மனித குலத்தில் இன்னும் நம்பிக்கை வேரூன்ற, பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப்போல, சில நூறு மனிதர்கள் இருப்பதாலேயே, உலகத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, மாசற்றக் குழந்தைகள் திருவிழா, திருக்குடும்பத் திருவிழா, ஆகிய அனைத்தும், துன்பத்திலும், இரத்தத்திலும் தோய்ந்திருந்தாலும், நம்பிக்கை தரும் விழாக்களாக, நம் மத்தியில் வலம் வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.