2017-12-30 14:40:00

பாசமுள்ள பார்வையில் – சுனாமி உருவாக்கிய திருக்குடும்பம்


2004ம் ஆண்டு, டிசம்பர் 26, ஞாயிறு, திருக்குடும்பத் திருநாளன்று, இந்தியா, இலங்கை உட்பட, பல ஆசிய நாடுகளின் கடற்கரைப்பகுதிகளைத் தாக்கிய சுனாமி, நம் நினைவுகளில் நிழலாடுகின்றது. இந்த சுனாமி, பல இலட்சம் குடும்பங்களைச் சிதைத்தது. அழிவையும், கண்ணீரையும் கொண்டு வந்தது. அந்த அழிவையும், கண்ணீரையும் தொடர்ந்து வந்த நாட்களில், பல்லாயிரம் புதுமைகளும் நடந்தன. இந்தப் புதுமைகளில் ஒரு சில, ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால், பல்லாயிரம் புதுமைகள், செய்திகளாய் வெளிவராமல், செயல் வடிவம் பெற்றன என்பதும் உண்மைதான். சுனாமி என்ற பேரழிவைத் தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளில் வெளிவந்த நம்பிக்கை தரும் பல செய்திகளில், என் மனதில் ஆழமாய்ப் பதிந்த ஒரு செய்தி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப் பற்றியச் செய்தி.

தங்கள் குழந்தைகள் மூவரையும் சேர்த்து, குடும்பத்தில் பத்து பேரை, சுனாமியில் இழந்தவர்கள், பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியர். டிசம்பர் 26, பரமேஸ்வரனின் பிறந்த நாள். நாகப்பட்டினம் கடற்கரையில் தன் பிறந்தநாளைக் கொண்டாட, மூன்று குழந்தைகளுடனும், ஏழு உறவினர்களுடனும் சென்றார் பரமேஸ்வரன். அவ்வேளையில் வந்த சுனாமி, அவரது மூன்று குழந்தைகளையும் மற்ற உறவினர்களையும் கடலுக்கு இரையாக்கியது.

குழந்தைகளை இழந்தபின்னர், வாழ்வதில் பொருளில்லை என்று, பரமேஸ்வரன் அவர்கள், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தபோது, அவரது மனைவி, சூடாமணி அவர்கள், மாற்றுவழியைக் காட்டினார். நம்பிக்கையிழந்து, வெறுப்புடன் இவ்வுலகிலிருந்து விடைபெறுவதற்குப் பதில், ஒரு புதுமையை அவர்கள் ஆரம்பித்தனர்.

அந்தச் சுனாமியால் பெற்றோரை இழந்து தவித்த 16 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். குழந்தைகளின் சாதி, மதம், இவற்றையெல்லாம் கடந்து, மனித நேயம் என்ற அடிப்படையில் மட்டுமே குழந்தைகளைத் தத்தெடுத்தனர். 16 குழந்தைகளுடன், 'நம்பிக்கை' என்ற பெயருடன் ஆரம்பமான இக்குடும்பத்தில், இன்று 37 குழந்தைகள் உள்ளனர். ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இதுவும் ஒரு திருக்குடும்பம் தானே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.