சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

திருக்குடும்பத் திருநாள் – திருத்தந்தையின் மூவேளை செப உரை

திருக்குடும்பத் திருநாளன்று புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை - AFP

01/01/2018 12:58

சன.01,2018. டிசம்பர் 31, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட திருக்குடும்பத் திருநாளையொட்டி, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, கிறிஸ்மஸ் விழாவைத் தொடரும் இஞ்ஞாயிறன்று, திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுகிறோம். தங்கள் குழந்தை இறைவனுக்குரியவர் என்பதையும், தாங்கள் அக்குழந்தைக்கு உரிமையாளர்கள் அல்ல, மாறாக, காவலர்கள் என்பதையும் உறுதியாக்க, மரியாவும் யோசேப்பும் குழந்தையை கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் இந்த உண்மையை உணர்வது, பயனுள்ளதாக இருக்கும்.

கடவுளே அனைத்திற்கும் முதன்மையானவர் என்பதை, ஒவ்வொரு குடும்பமும் உணரவேண்டும். இந்த உண்மையை குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.

இறைவனைக் குறித்து இவ்வுலகம் உருவாக்கியுள்ள தவறான எண்ணங்களை அகற்றி, உண்மை இறைவனை உலகறியச் செய்வதற்கே இயேசு வந்தார். இதனால், பலரது வீழ்ச்சியும், எழுச்சியும் இருக்கும் என்பதை, சிமியோன் மரியாவிடம் கூறினார்.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு, மரியாவும், யோசேப்பும், கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது. (லூக்கா 2:39-40)

குழந்தைகள் வளர்வதைக் காண்பது, குடும்பங்களில் உண்மையான மகிழ்வு. சாதாரண, எளிமையான மனித வளர்ச்சிக்கு, இயேசு தன்னையே உட்படுத்திக்கொண்டார். இந்த வளர்ச்சியைக் கண்டு, மரியாவும், யோசேப்பும் மனநிறைவு கொண்டனர்.

இறைவனுக்கும், இவ்வுலகிற்கும் உகந்த வகையில் குழந்தைகள் வளர்வதற்கு ஏற்றதொரு சூழலை உருவாக்கித்தருவதே, குடும்பங்களின் தலையாயப் பணி. குடும்பத்தின் அரசியான மரியாவின் பரிந்துரையோடு, அனைத்து குடும்பங்களுக்காகவும் செபிப்போம்.

இவ்வாறு தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 29, கடந்த வெள்ளியன்று எகிப்தில், தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும், "வன்முறையை வளர்க்கும் அனைத்து உள்ளங்களின் மனமாற்றத்திற்காக" செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

01/01/2018 12:58