சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

‘தே தேயும்’ நன்றி வழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை

‘தே தேயும்’ நன்றி வழிபாட்டில் மறையுரை வழங்கும் திருத்தந்தை - AFP

01/01/2018 15:44

சன.01,2018. டிசம்பர் 31, இஞ்ஞாயிறு, ஆண்டின் இறுதிநாளையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் மாலை 5 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தே தேயும்’ நன்றி வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை:

காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு  கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். (கலாத்தியர் 4:4-5)

மனுவுருவான வார்த்தையாம் இயேசு கிறிஸ்து, காலத்திற்கு நிறைவைத் தந்தார். அவரது நிறைவை, முதலில் உணர்ந்தது, அவரைப் பெற்றெடுத்த அன்னை.

அந்த அன்னையிடமிருந்து, திருஅவை, தன் நிறைவைப்பெற்று, இறைவனுக்கு நன்றி பகர்கிறது. இறைவன் வழங்கும் கொடைகளுக்கு, நன்றியே தகுந்த பதிலிறுப்பு. முடிவுறும் இந்த ஆண்டில் இறைவன் வழங்கிய கொடைகளுக்கு நன்றி கூறுகிறோம்.

2017ம் ஆண்டை, இறைவன், நலமானதாக, நிறைவுள்ளதாக நமக்களித்தார். ஆனால், மனிதர்களாகிய நாம், இவ்வாண்டை, பல வழிகளில் காயப்படுத்தியுள்ளோம். மனித சமுதாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் இழைத்துள்ள குற்றங்களுக்கு, இறைவன் முன்னும், சமுதாயம், மற்றும் இயற்கை முன்னும் நாம் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இன்றிரவு, இயேசுவின் அருள் நம்மை நிரப்புவதால், நாம் நன்றியால் நிறைந்துள்ளோம்.

உரோமைய ஆயராகிய நான், இந்நகரில், திறந்த உள்ளத்துடன் வாழ்வோரை எண்ணி, நன்றியால் நிறைந்துள்ளேன். எவ்வித விளம்பரமும் தேடாமல், இந்நகருக்காக தங்கள் கடமைகளை ஆற்றுவோரையும், தேவையில் இருப்போருக்கு, பல வழிகளில் உதவிகள் செய்வோரையும் எண்ணி, நன்றியுணர்வு கொண்டுள்ளேன். பொறுப்புள்ள குடிமக்களாக இளையோரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெற்றோர், ஆசிரியர்கள் மீது அதிக மதிப்பு கொண்டுள்ளேன்.

பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகள் இருப்பினும், அவற்றைப் பெரிதுபடுத்தாமல், தங்களையும், தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் முன்னேற்ற உழைப்போரை எண்ணி, பெருமைப்படுகிறேன்.

தங்கள் நகர் மீது கொண்ட அன்பால், சொற்களால் அல்ல, செயல்களால், பொதுநலனைப் பேணும் அனைவருக்காகவும், இறைவனுக்கு நன்றி கூற உங்களை அழைக்கிறேன்.

'தே தேயும்' நன்றி வழிபாட்டிற்குப் பின்னர், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் குடிலைப் பார்வையிட சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்தோருக்கு தன் வாழ்த்துக்களைக் கூறியபின், சாந்தா மார்த்தா இல்லத்திற்குச் சென்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

01/01/2018 15:44