சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை - சுட்டும் விரல்களைப் பற்றிக்கொள்ளாமல்...

இளம் புத்த துறவி - AFP

02/01/2018 12:23

அறிவுத்திறன் நிறைந்த ஓர் இளையவர், புத்த மதத்தின் வேத நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். வேத நூல்களில் கூறப்பட்டிருந்த சொற்கள், முன்னுக்குப்பின் முரணாக உள்ளனவே என்று குழம்பிப்போன அவர், தன் குருவிடம் அதைப்பற்றிக் கூறினார். குருவோ அவருக்கு விளக்கம் ஏதும் சொல்லாமல், தன் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். குரு தன்னிடம் வைத்திருந்த பொருள்களை தூக்கி எறிந்து, அந்தப் பொருள்களைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கொண்டுவருமாறு நாயிடம் சொல்ல, அவற்றை நாய் கொண்டுவந்து கொடுத்தவண்ணம் இருந்தது. இந்த விளையாட்டு முடிந்ததும், குரு, இளையவரை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார். அப்போது, மாலை நேரம். கூடவே, குருவின் நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து.

அவர்கள் இருவரும் நடந்து சென்றபோது, இளையவரின் பிரச்சனைக்கு பதில் சொல்ல அரம்பித்தார் குரு: "வேதங்களில் கூறப்பட்டுள்ள சொற்கள், உண்மையைச் சுட்டிக்காட்டும் குறியீடுகள். உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய். பாதையைச் சுட்டிக்காட்டும் குறியீடுகள் உன் கவனத்தைத் திசை திருப்ப விட்டுவிடாதே. நான் சொல்வதை நீ புரிந்துகொள்ள, ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்குகிறேன்" என்று கூறிய குரு, தன் நாயை அருகில் அழைத்து, நிலவைச் சுட்டிக்காட்டி, "அந்த நிலவைக் கொண்டுவா" என்று கூறினார். பின்னர் இளையவரிடம், "என் நாய் எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது?" என்று கேட்டார்.

"அது உங்கள் விரலையேப் பார்த்துக்கொண்டிருக்கிறது" என்று சொன்னார், இளையவர். "இதைப்போலத்தான் நீயும் செய்துகொண்டிருக்கிறாய். உண்மையைச் சுட்டிக்காட்டும் சொற்களில் நீ தங்கிவிட்டாய்" என்று கூறினார்.

சுட்டிக்காட்டும் விரல்களை, பாதையைக் காட்டும் குறியீடுகளைப் பற்றிக்கொள்ளாமல், இளையோர், இவ்வாண்டு, உண்மையை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்வார்களாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

02/01/2018 12:23