2018-01-02 14:50:00

அமைதியைக் கட்டியெழுப்புவதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது


சன.02,2018. நாம் நினைப்பது மற்றும் நாம் செயல்படுவதை வைத்து மட்டும் அமைதியைக் கட்டியெழுப்ப இயலாது, மாறாக, பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவது போலன்றி, பிறர் இருப்பது போலவே ஏற்பதும் அமைதியை ஏற்படுத்துவதற்கு அவசியம் என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகியான பேராயர், பியெர்பத்திஸ்தா பிட்சபாலா அவர்கள் கூறியுள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று, இறைவனின் அன்னை பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் பிட்சபாலா அவர்கள், அமைதியைப் புரிந்துகொள்வது பற்றியும், அமைதியைக் கட்டியெழுப்புவது பற்றியும், மறையுரையில் விளக்கினார்.

பிறர் நமக்குக் கற்றுக்கொடுப்பதற்கு நிறையக் காரியங்களை எப்போதும்  கொண்டிருக்கின்றனர் என்பதை மனதில் கொண்டிருப்பது, அமைதியை எப்படி ஏற்படுத்துவது என்பதை, பிறருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற மனநிலையில் உட்படாமல் இருப்பதைத் தவிர்க்கும் என்றும் கூறினார், பேராயர் பிட்சபாலா.

சிந்திப்பதற்கு சிறிதளவு நேரமே ஒதுக்கப்படுகின்ற நம் காலத்தில், எல்லாவற்றையும் உடனடியாகச் செய்ய வேண்டும் என்ற போக்கும் காணப்படுகின்றது, இத்தகைய சூழலில், பிறர் பற்றிய இந்த மனநிலை, நமக்குச் சிறந்த பாடமாகும் என்றும், பேராயர் பிட்சபாலா அவர்கள் மறையுரையில் கூறினார்.

இயேசு பாலனைச் சந்திக்கச் சென்ற இடையர்களைப் போன்று, நாமும் அமைதியை அறிவிக்க வேண்டும், அதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உரையாற்றினார் பேராயர் பிட்சபாலா.

நம்மிலுள்ள அமைதியின் இளவரசர் எனும் கொடை, உண்மையிலேயே நம்மில் இருந்தால், நம் எண்ணங்களில் மட்டுமல்லாமல், நம் குடும்பங்கள், சமூகம், இளையோர், பங்குத்தள நடவடிக்கைகள், நம் அரசியல் செயல்பாடுகள் ஆகிய எல்லாவற்றிலும், அமைதியைக் கட்டியெழுப்பும் முறையை வாழ்வோம் என்றும் உரைத்தார், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் பிட்சபாலா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.