2018-01-02 15:19:00

குழந்தைகளின் வாழ்வு பாதுகாக்கப்பட யுனிசெப் விண்ணப்பம்


சன.02,2018. 2018ம் ஆண்டின் முதல் நாளில் உலகெங்கும் ஏறத்தாழ 3 இலட்சத்து 86 ஆயிரம் குழந்தைகள் பிறப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டவேளை, இக்குழந்தைகளின் வாழ்வு பாதுகாக்கப்படுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு, நாடுகள் மேலும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது, ஐ.நா.வின் குழந்தை நல நிதி நிறுவனமான யுனிசெப்.

புதிய ஆண்டின் முதல் நாளில் பிறந்த குழந்தைகளில் ஏறத்தாழ 90 விழுக்காடு, மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் பிறந்தன என்றும், இந்தக் குழந்தைகள், பிறந்த ஒரு மணி நேரத்திற்குமேல், ஒரு நாளைக்கு மேல், ஒரு மாதத்திற்குமேல் என்று, தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு நாடுகள் உதவ வேண்டுமென்றும் விண்ணப்பித்துள்ளார், யுனிசெப் நிறுவனத்தின் நலவாழ்வு பிரிவின் தலைவர், ஸ்டீபன் பீட்டர்சன்.

ஆண்டின் முதல் நாளில் பிறந்த குழந்தைகளில் பலர் உயிர் வாழ்வார்கள் எனினும், சில குழந்தைகள் தங்களின் முதல் நாளைக் காண்பதில்லை என்றும் கூறும், பீட்டர்சன் அவர்கள், 2016ம் ஆண்டில், 2,600 குழந்தைகள், தாங்கள் பிறந்த 24 மணி நேரத்திற்குள் இறந்தனர் என்றும் கூறினார்.

இந்தியாவில் 69,070, சீனாவில் 44,760, நைஜீரியாவில் 20,210, பாகிஸ்தானில் 14,910, இந்தோனேசியாவில்13,370, அமெரிக்க ஐக்கிய நாட்டில் 11,280, காங்கோ சனநாயக குடியரசில் 9,400, எத்தியோப்பியாவில் 9,020, பங்களாதேஷில் 8,370 என்று, 2018ம் ஆண்டின் முதல் நாளில் குழந்தைகள் பிறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.