2018-01-02 14:58:00

பிலிப்பைன்ஸ்:டிசம்பர் 8 தேசிய விடுமுறை கத்தோலிக்கர் வரவேற்பு


சன.02,2018. பிலிப்பைன்ஸ் நாட்டில், அமல அன்னை விழாவாகிய, டிசம்பர் 8ம் தேதியை, புதிய தேசிய விடுமுறை நாளாக அறிவித்திருப்பதை வரவேற்றுள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள்.

பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்தே அவர்களின் இந்த அறிவிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, Balanga ஆயர் Ruperto Santos அவர்கள், அன்னை மரியா தங்கள் நாட்டிற்கு, குறிப்பாக, இக்கிறிஸ்மஸ் காலத்தில் வழங்கியுள்ள நிலையான கொடை இது என்று பாராட்டியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் மக்கள் மிகவும் தாய்மையுள்ளம் கொண்டவர்கள் என்றும், வாழ்வின் எச்சூழலிலும் அன்னையரிடம் செல்வதையும், அன்னையரோடு இருந்து, அன்னையருக்கு ஆதரவளிப்பதையும் தங்கள் இயல்பிலே கொண்டிருக்கின்றனர் என்றும், ஆயரின் அறிக்கை கூறுகின்றது.

மேலும், அரசுத்தலைவர் துத்தர்தே அவர்களின் இந்த அறிவிப்பு, உண்மையிலே ஆனந்த வியப்பைக் கொடுத்துள்ளது என்றும், அரசுத்தலைவர், கத்தோலிக்கத் திருஅவை மீது இன்னும் சிறிது மதிப்பு வைத்துள்ளதையே இது காட்டுகின்றது என்றும், Sorsogon ஆயர் Arturo Bastes அவர்கள் கூறியுள்ளார்.

அமல அன்னை விழாவாகிய, டிசம்பர் 8ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் மசோதாவில் டிசம்பர் 28ம் தேதி கையெழுத்திட்டார், அரசுத்தலைவர் துத்தர்தே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.