சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

காங்கோ குடியரசில் கத்தோலிக்கர் தாக்கப்பட்டிருப்பதற்கு..

காங்கோ சனநாயக குடியரசின் அரசுத்தலைவருக்கு எதிராக கத்தோலிக்கர் - AFP

03/01/2018 16:04

சன.03,2018. ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயக குடியரசின் அரசுத்தலைவர் ஜோசப் கபிலா அவர்கள் பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தி, அந்நாட்டு கத்தோலிக்க பொதுநிலையினர் அமைப்பு (CLC) அமைதியாக நடத்திய ஊர்வலத்தின் மீது பாதுகாப்புப் படைகள் தாக்குதல்கள் நடத்தியிருப்பது குறித்து, ஆயர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இத்தாக்குதல்கள் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள, தலைநகர் கின்ஷாசா பேராயர் கர்தினால் Laurent Monsengwo Pasinya அவர்கள், சீருடை அணிந்த நாட்டினர் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

சில பீடப்பரிசாரகர், அருள்பணியாளர்கள் உட்பட விசுவாசிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதும், சில ஆலயங்கள் அவமானப்படுத்தப்பட்டிருப்பதும், ஒவ்வொரு சனநாயக நாட்டிலும் உறுதிசெய்யப்பட்டுள்ள வழிபாட்டு சுதந்திரம் மீறப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றது என்று, காங்கோ ஆயர் பேரவை கூறுவதையும் கர்தினாலின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

விவிலியப் பிரதிகள், செபமாலைகள், சிலுவைகள், அன்னை மரியா திருவுருவங்கள் போன்றவற்றை ஏந்தியிருந்த விசுவாசிகளுக்கு எதிராகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது, இவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது, காவல்துறையினர் மற்றும் படைவீரர்கள், ஆலயத்திற்குள் இருந்த விசுவாசிகள் மீது கண்ணீர்ப் புகையை வீசியிருப்பது, ஆலயத்தில் பணத்தையும் கைபேசிகளையும் திருடியிருப்பது போன்ற அத்துமீறல் செயல்களை வன்மையாய்க் கண்டித்துள்ளார், கர்தினால் Pasinya.

2016ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதியோடு, அரசுத்தலைவரின் இருமுறை பதவிக்காலம் முடிவுற்றுள்ளது எனினும், அரசுத்தலைவர் கபிலா அவர்கள் பதவி விலக மறுக்கிறார் மற்றும், பொதுத்தேர்தல்களை நடத்தவும் அவர் அனுமதிக்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

2018ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, பொதுத்தேர்தலுக்குரிய நாளாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அரசுத்தலைவர் மூன்றாவது முறை பதவி வகிப்பதற்காக, அரசியல் அமைப்பை மாற்றுவதற்கு அரசுத்தலைவர் கபிலா அவர்கள் முயற்சித்து வருகிறார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

03/01/2018 16:04