சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

மறைக்கல்வியுரை: மன்னிக்கும் இறையருளின் வல்லமையில் நம்பிக்கை

புதன் மறைக்கல்வியுரையின்போது - REUTERS

03/01/2018 15:30

சன.03,2018. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தொடர்ந்து இன்னும் விடுமுறை கால உணர்விலேயே இருக்கும் உரோம் நகரம், 6ம் தேதியின் திருக்காட்சி விழாவுக்காகத் தன்னை தயாரித்துவரும் வேளையில், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு என பல்வேறு நாடுகளிலும் இருந்து உரோம் நகருக்கு வந்திருந்த திருப்பயணிகளால், வத்திக்கான், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கம் நிரம்பி வழிய, தன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்', என தூய பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் வரிகள் முதலில் வாசிக்கப்பட, திருப்பலி குறித்த புதன் மறைக்கல்வித் தொடரின் 6ம் பகுதி, திருத்தந்தையால் வழங்கப்பட்டது.

அன்புச் சகோதர சகோதரிகளே! திருப்பலி குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, பாவக்கழுவாய் சடங்கு குறித்து நோக்குவோம். தூய மறையுண்மைகளைச் சிறப்பிப்பதற்கு முன்னர் அதற்கு தகுதியுடையவர்களாக நம்மை மாற்றும் பொருட்டு, நாம் பாவிகள் என்பதை கடவுள் முன்னிலையிலும் நம் சகோதர சகோதரிகள் முன்னிலையிலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். பாவமன்னிப்பு குறித்த இந்த செபத்தில் நாம் ஒரு சமூகமாக இதனை அறிக்கையிட்டாலும், ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலேயே 'நான் பாவி என ஏற்றுக் கொள்கிறேன்' எனக் கூறுகிறோம். இயேசுவின் உவமையில் கூறப்படும் தாழ்ச்சியுடைய ஆயக்காரரைப் போல், நாமும் நம் மார்பில் அறைந்து, இறை இரக்கம் மற்றும் மன்னிப்பின் கொடைக்கு நாம் தகுதியற்றவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பின்னர், புனிதத்திலும், மனமாற்றத்திலும் நம்மை உறுதிப்படுத்த, அன்னை மரியா, வானதூதர்கள், மற்றும் புனிதர்களின் பரிந்துரையை வேண்டுகிறோம். இதன் பின்னர், 'எல்லாம் வல்ல இறைவன், நம் பாவங்களை மன்னித்து நம்மை நித்திய வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக' என அருள்பணியாளர் உரைத்து, பாவ மன்னிப்பை வழங்குகிறார். ஒப்புரவு அருளடையாளத்தில் வழங்கப்படும் சாவான பாவத்திற்குரிய மன்னிப்பை, இது வழங்குவதில்லையெனினும், மன்னிப்பு மற்றும் ஒப்புரவு குறித்த கடவுளின் வாக்குறுதியில் நம் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் வழியாக நாம், தாவீது, திருந்திய மகன், தூய பேதுரு போன்ற முக்கிய விவிலிய நபர்களின் வரிசையில் இணைகிறோம். இவர்கள், தங்கள் பாவங்களை உணர்ந்தவர்களாக, தங்களை திருத்தியமைக்கும் இறையருளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு, கடவுளின் முன்னிலையில் நம்பிக்கையுடன் தங்கள் பாவங்களை ஏற்றுக்கொண்டவர்கள்.

இவ்வாறு, தன் புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

03/01/2018 15:30