2018-01-03 15:46:00

இமயமாகும் இளமை.........: மூன்று இளைஞர்களின் முன்னுதாரணம்


பிரவின் குமார் பள்ளி செல்லும் காலத்தில் மிகவும் தாமதமாகவே வகுப்புக்குச் செல்வார். அதற்குக் காரணம், அவர் வாழ்த வீடு இருந்த இடத்திலிருந்து திறந்தவெளி கழிவறை மிகவும் தூரத்தில் இருந்தது. அதற்காகப் பல கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். அப்படிச் சென்றுவிட்டு வருவதற்குத் தாமதம் ஆனதால், பள்ளிக்கும் தாமதமாகவே சென்றார் பிரவின். தன்னைப் போல பிறரும் இதே போன்றதொரு துன்பத்தை அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் அவருடைய ஆழ்மனதில் பதிந்தது.

கழிவறைகள் இல்லாத குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளுடன்கூடிய கழிவறைகளைக் கட்ட வேண்டும் என உறுதி பூண்டார். இவருடன் இத்திட்டத்தில் இணைந்தனர் இவருடைய நண்பர்களான சந்தன் குமார், கனடாவில் வாழ்ந்த அனூப் ஜெயின் ஆகியோர். இவர்கள், ‘ஸ்ரீ’(Sanitation and Health Rights in India - SHRI) எனும் அமைப்பை, 2010-ம் ஆண்டு உருவாக்கினர். நான்கு ஆண்டுகள் கடந்து, பீஹாரின் நெமுவா கிராமத்தில் 16 கழிவறைகளுடன்கூடிய நலவாழ்வு வளாகம் கட்டப்பட்டது. ஸ்ரீ அமைப்பு வடிவமைத்த நலவாழ்வு வளாகம் மாறுபட்டதாக இருக்கிறது. சாதாரணமாக வடிவமைக்கப்படும் பொதுக் கழிவறைகளில், மனிதக் கழிவு நிலத்தடியில் அமைக்கப்பட்ட தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின்னர் அகற்றப்படும். ஆனால், இவர்களோ, கழிவைச் சேகரிப்பதற்குப் பதிலாக, அதை உயிரித் தொழில்நுட்பம் மூலம் மின்சாரமாக மாற்றுகிறார்கள். பின்னர், அந்த மின்சாரத்தைக் கொண்டு, ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரைப் பெற்று, அதைச் சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். இதன் வழியாகக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சுகாதார வளாகத்தையும் பராமரிக்கிறார்கள். இந்த வகையில், பீஹாரின் 5 குக்கிராமங்களில் நலவாழ்வு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

யுனிசெஃப் அமைப்பினர் இந்த வளாகத்தைப் பார்வையிட்டுப் பாராட்டிச் சென்றுள்ளனர். இளைஞர்கள் நினைத்தால், வல்ல செயல்கள் ஆற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் இந்த மூன்று இளைஞர்களும்.

“திறந்தவெளிக் கழிவறை இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு” என்று உறுதியாகக் கூறுகின்றனர் இவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.