2018-01-03 16:18:00

ஜகார்த்தா உயர்மறைமாவட்டம், 2018ம் ஆண்டு ஒன்றிப்பின் ஆண்டு


சன.03,2018. இந்தோனேசியாவின் ஜகார்த்தா உயர்மறைமாவட்டம், 2018ம் ஆண்டை, ஒன்றிப்பின் ஆண்டாக அறிவித்துள்ளது.

2018ம் ஆண்டுக்கென, மூன்று பக்க மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள, ஜகார்த்தா உயர்மறைமாவட்டப் பேராயர் இக்னேஷியுஸ் சுஹார்யோ அவர்கள், அந்நாட்டின் பஞ்சசீலக் கொள்கையில் மூன்றாவதான தேசிய ஒன்றிப்பு குறித்து, ஆழமான புரிதல் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2018ம் ஆண்டை, ஒன்றிப்பின் ஆண்டாக அறிவித்துள்ள பேராயர் சுஹார்யோ அவர்கள், இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, ஒன்றிப்பின் அடையாளமான அனைத்து இனத்தவரின் அன்னை மரியா திருவுருவத்தையும் ஜகார்த்தா உயர்மறைமாவட்டம் வெளியிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தோனேசியாவில் சமய சகிப்பற்றதன்மை குறித்த அச்சம் அதிகரித்து வருகின்றதென்றும், கடந்த ஆண்டு நடந்த ஜகார்த்தா ஆளுனர் தேர்தலில், மதம் பயன்படுத்தப்பட்டதை நாம் அறிந்துள்ளோம் என்றும் பேராயரின் அறிக்கை கூறுகின்றது.   

திருக்காட்சி விழாவான சனவரி 6, வருகிற சனிக்கிழமை மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவான சனவரி 7, வருகிற ஞாயிறன்று, ஜகார்த்தா உயர்மறைமாவட்டத்தின் அனைத்துப் பங்கு ஆலயங்களிலும், பேராயரின் இந்த அறிக்கை வாசிக்கப்படும்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.