2018-01-03 15:43:00

நாம் வழங்கும் சாட்சியங்களுடன் அமைதி இயலக்கூடியதே


சன.03,2018. “இயேசுவின் பெயரில் நாம் வழங்கும் சாட்சியங்களுடன், அமைதி இயலக்கூடியதே என்பதை, நம்மால் நிரூபிக்க இயலும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இப்புதனன்று வெளியாயின.

@Pontifex என்ற முகவரியில், ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் வெளியிடப்படும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, நான்கு கோடிக்கு அதிகம் என்றும், 2016ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட திருத்தந்தையின் இன்ஸ்டகிராம் செயலியைப் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐம்பது இலட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓர் காகித அட்டையின் பின்பக்கத்தில், போரின் கனி என்று எழுதப்பட்டு, அதன்கீழ் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கையெழுத்தும், முன்பக்கத்தில், நாகசாகியில் போரில் பாதிக்கப்பட்ட, கவலை தோய்ந்த ஒரு சிறுவன், தன் முதுகில் தங்கையைத் தூக்கி வைத்திருப்பது போன்ற படமும் அச்சிடப்பட்டுள்ளன. திருத்தந்தையின் விருப்பத்தின்படி, இந்தக் காகித அட்டை, இந்தக் கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் இடம்பெறும் போர்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் திருத்தந்தையின் விண்ணப்பத்தை வலுப்படுத்துவதாகவும், அமைதிக்கு விண்ணப்பிப்பதாகவும் இந்த அட்டை உள்ளது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த அட்டையிலுள்ள நலிவடைந்த சிறுவனின் புகைப்படம், அமெரிக்க ஐக்கிய நாட்டு புகைப்படக்காரர் ஜோசப் ரோஜெர் டொனெல் என்பவரால் எடுக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.