சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

திருத்தூதுப் பயணத்தின்போது பயனற்ற செலவுகளைத் தவிர்க்குமாறு..

சிலே திருத்தூதுப் பயணத் தயாரிப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளையோர் - AFP

04/01/2018 15:02

சன.04,2018. “ஒவ்வொரு காலத்திலும் வாழ்கின்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நெருக்கமாக இருக்கவும், தமது எல்லையில்லாக் கருணையை நமக்குக் காட்டவும், இறைவன் ஒரு குழந்தையானார்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், திருப்பீடத்திற்கான உருகுவாய் நாட்டு புதிய தூதுவர் Mario Juan Bosco Cayota Zappettini அவர்களை, இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரிடமிருந்து பணிநியமன நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றார்.

இன்னும், சிலே நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின்போது பயனற்ற செலவுகளைத் தவிர்க்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், இப்பயணத்திற்கு ஆகும் செலவுகளைக் குறைக்கும் விதமாக, இப்பயண நிகழ்வுகளுக்கு, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவதாக, இப்பயணத் தயாரிப்புக்களின் இயக்குனர் ஹாவியர் பெரால்த்தா அவர்கள் கூறினார்.

திருத்தந்தையின் சிலே நாட்டுத் திருத்தூதுப் பயணத் தயாரிப்புகள் பற்றி, T13 என்ற, சிலே நாட்டுத் தினத்தாளுக்குப் பேட்டியளித்த பெரால்த்தா அவர்கள், திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றவிருக்கும் திருப்பலி மேடைகள், மற்ற நேரங்களில் பயன்படுத்தப்படுவதற்கு உதவியாக அமைக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

திருப்பலி மேடைகள் மட்டும் 4,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது என்றும், ஆறு இலட்சத்திற்கு மேற்பட்ட ஓஸ்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றும், பெரால்த்தா அவர்கள் தெரிவித்தார். திருத்தந்தையின் சிலே நாட்டுத் திருத்தூதுப் பயணத்திற்கு, நாற்பது இலட்சம் சிலே நாட்டு பேசோஸ் பணம் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளவேளை, இச்செலவை, சிலே தலத்திருஅவையும், அரசும் பகிர்ந்துகொள்கின்றன என்று, T13 தினத்தாள் கூறியுள்ளது.

இம்மாதம் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சிலே நாட்டிலும், பின்னர் 22ம் தேதி வரை பெரு நாட்டிலும் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

04/01/2018 15:02