2018-01-04 15:47:00

அமைதியான ஒலிம்பிக் விளையாட்டுக்கு சமயத் தலைவர்கள்


சன.04,2018. தென் கொரியாவின் Pyeongchangல் நடைபெறவிருக்கும், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு உறுதி வழங்கப்படுமாறு, கிழக்கு ஆசிய அமைதிக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வட கொரியாவும், அமெரிக்க ஐக்கிய நாடும் தங்களுக்கிடையே பயன்படுத்தும், இராணுவ அச்சுறுத்தல்களை நிறுத்தவும், பதட்டநிலைகளைக் களைவதற்கு, கலந்துரையாடலில் ஈடுபடவும் வேண்டுமென, தென் கொரிய சமய, அரசியல் மற்றும் சமூகநலத் தலைவர்களை உள்ளடக்கிய, சோல் நகரில் இயங்கும் கிழக்கு ஆசிய அமைதிக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் வட கொரியா இணையுமாறு அழைப்பு விடுத்துள்ள இக்கழகம், இவ்வாறு இணைவது, அந்த உலக விழா அமைதியான வழியில் நடைபெறுவதற்கு முதல் படியாக அமையும் என்றும் கூறியுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமைதி குலைந்தால், அது, வடகிழக்கு ஆசியா மற்றும் உலகமனைத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், அக்கழகம் எச்சரித்துள்ளது.

வருகிற பிப்ரவரி 9ம் தேதி முதல், 25ம் தேதி வரை, Pyeongchangல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறவிருக்கின்றன. மேலும், 2020ம் ஆண்டில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகள் டோக்கியோவிலும், 2022ம் ஆண்டில், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் பெய்ஜிங்கிலும் நடைபெறவிருக்கின்றன.

இதற்கிடையே, வடகொரிய மற்றும் தென்கொரிய எல்லையில் மீண்டும் ஹாட்லைன் தொலைப்பேசி வசதி இயங்கத் துவங்கியுள்ளது. இரு நாடுகளிடையே பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த ஹாட்லைவன் தொலை பேசி 2016-ம் ஆண்டு துண்டிக்கப்பட்டது. அது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இரு கொரிய நாடுகளின் அதிகாரிகள் ஏறத்தாழ 20 நிமிடம் தொலைப்பேசி வாயிலாக உரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.