2018-01-04 14:16:00

இமயமாகும் இளமை : தன்னம்பிக்கை இளையோர்


ஒரு சமயம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கைதட்டும் போட்டி ஒன்று நடந்தது.  அதிக நேரம் தொடர்ந்து கைதட்டுகின்றவர்களுக்குப் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டி நடைபெற்ற நாளில் அந்த அரங்கமே நிரம்பிவழிந்தது. போட்டியும் ஆரம்பமானது. மின்விளக்கு ஒன்று போட்டியாளர்கள் மீது மேலிருந்து வட்டமிட்டுக்கொண்டிருந்தது. நேரம் நேரம் ஆக ஆக கைதட்டும் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. ஆனால் போட்டி தொடங்கி ஐந்து மணி நேரங்களுக்குமேல் ஆகியும், ஓரிடத்தில் மட்டும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. மேலிருந்து விளக்கு அந்த இடத்தை நோக்கித் திரும்பியது. இறுதியில் அந்த இடத்திலும் கைதட்டும் ஒலி நின்றது. போட்டியில் வெற்றிபெற்றவரை எழுந்து நிற்கச் சொன்னார்கள். ஒருவருக்குப் பதிலாக இருவர் எழுந்து நின்றனர். அரங்கத்தில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம். காரணம், அந்த இரு இளையோரில் ஒருவருக்கு வலது கை இல்லை. மற்றவருக்கு இடது கை இல்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து ஐந்து மணி நேரங்களுக்குமேல் கைகளைத் தட்டினர் என்பதை அறிந்த அனைவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். ஒரு கை இல்லாவிட்டால் என்ன, சேர்ந்து தட்டுவதற்கு இருவரிடமும் ஒவ்வொரு கை உள்ளதே என்ற நம்பிக்கையில் போட்டியில் கலந்துகொண்ட அந்த இரு இளையோரையும் பாராட்டதவர்களே இல்லை. மாற்றுத்திறன், எந்த ஒரு வெற்றிக்கும் தடையே இல்லை என்பதை இவர்கள் இருவரும் தங்கள் செயலால் போதித்து உள்ளனர். ஒரு கையை நம்பி இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கு இவர்களில் ஏற்பட்ட தன்னம்பிக்கையும் துணிச்சலும், மாற்றுத்திறனற்ற, மற்றும் மாற்றுத்திறனுள்ள எல்லாருக்குமே சிறந்த ஒரு பாடம்.

ஆம். வாழ்வில் நாம் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது. கைகளைத் தட்டுதல் உடல்நலத்துக்கும் நல்லது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.