2018-01-04 15:42:00

பெண்கொலைகள் நிறுத்தப்பட நிக்கராகுவா ஆயர்கள்


சன.04,2018. மத்திய அமெரிக்க நாடாகிய நிக்கராகுவாவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவரும்வேளை, அந்நாட்டில் இடம்பெறும் பெண் கொலைகள் நிறுத்தப்படுமாறு, தலத்திருஅவை விண்ணப்பித்துள்ளது.

ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர் பங்குபெற்ற, புத்தாண்டு திருப்பலியில் மறையுரையாற்றிய, நிக்கராகுவா தலைநகர் மானாகுவா பேராயர் கர்தினால் Leopoldo José Brenes Solórzano அவர்கள், மனித வாழ்வு பாதுகாக்கப்படுவதற்கு, 2018ம் ஆண்டில் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

பெண்கள், தங்கள் கணவர்களாலோ அல்லது வேறு எந்த நபர்களாலோ அடிக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், அவர்களின் உரிமைகளை மீறுவதும் நிறுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார், கர்தினால் Brenes Solórzano.

2017ம் ஆண்டில் 51 பெண்களும், 2018ம் ஆண்டில் San José de Bocay நகரில் ஒரு பெண்ணும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதைக் குறிப்பிட்ட கர்தினால் Brenes Solórzano அவர்கள், பெண்கள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்துமாறும், கணவர் வன்முறையில் ஈடுபடும்போது அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை, மனைவியர் அறிந்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.