சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் துன்புறுகின்றனர்

நைஜீரிய கர்தினால் John Onaiyekan - RV

05/01/2018 15:22

சன.05,2018. நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயங்களும், மசூதிகளும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால், அந்நாட்டில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், அனைத்து இனத்தவருமே பாதுகாப்பின்றி துன்பப்பட்டு வருகின்றனர் என்று, அந்நாட்டு கர்தினால் John Olorunfemi Onaiyekan அவர்கள், இத்தாலிய திருஅவை ஊடகம் ஒன்றிடம் கூறினார்.

SIR செய்தியிடம் இவ்வாறு தெரிவித்த, அபுஜா பேராயர், கர்தினால் Onaiyekan அவர்கள், நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய கொள்ளைகளும், ஆறு நைஜீரிய அருள்சகோதரிகள் கடத்தப்பட்டது உட்பட, கடத்தல்களும் தொடர்கின்றன என்றும், நாட்டில் அமைதி இல்லை என்றும் கூறினார்.

போக்கோ ஹராம் அமைப்பின் ஜிகாதி குழு செயல்படும், நாட்டின் வடக்கிலுள்ள போர்னோ மாநிலத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைத் தாக்குதல்கள் பன்மடங்காகி வருகின்றன எனவும் கவலை தெரிவித்தார், கர்தினால் Onaiyekan.

சனவரி 03, இப்புதன்கிழமையன்றுகூட, Borno மாநிலத்தின் Gamboru நகரிலுள்ள மசூதி தாக்கப்பட்டதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் மசூதி முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்றும், ரிவர் மாநிலத்திலுள்ள ஓர் ஆலயத்தில் நடந்த புத்தாண்டு தின திருப்பலியில், ஆயுதம் ஏந்திய மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் என்றும் கர்தினால் தெரிவித்தார்.

நைஜீரியாவில், இனம் தெரியாத ஆயுதம் ஏந்திய மனிதர்களால், கடந்த நவம்பர் 13ம் தேதி ஆறு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டனர். இதுவரை அவர்கள் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென, திருத்தந்தையும், கடந்த டிசம்பர் 17ம் தேதி ஞாயிறு மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

05/01/2018 15:22