2018-01-05 15:31:00

ஆசியாவிலுள்ள சமயச் சிறுபான்மையினருக்காகச் செபிக்குமாறு..


சன.05,2018. ஆசியாவின் மிகவும் பரந்து விரிந்த கலாச்சார உலகில், திருஅவை ஏராளமான இடையூறுகளை எதிர்கொள்கின்றது மற்றும், திருஅவை சிறுபான்மையாக இருப்பதன் காரணத்தால், அதன் பணிகளும் மிகவும் கடினமாக உள்ளன என்று, சனவரி மாதச் செபக்கருத்து பற்றிய காணொளிச் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆசியத் திருஅவை எதிர்நோக்கும் இடையூறுகளும், இன்னல்களும், சவால்களும், ஏனைய சமயச் சிறுபான்மை மரபுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்றும், ஞானம், உண்மை மற்றும் தூய்மை வாழ்வுக்கான ஆவலை, அச்சிறுபான்மை சமயங்களுடன் நாம் பகிர்ந்துகொள்கின்றோம் என்றும், கூறியுள்ளார் திருத்தந்தை.

தங்களின் மத நம்பிக்கைக்காகச் சித்ரவதைப்படுத்தப்படும் மக்களை நினைக்கையில், நம் வழிபாடுகள் மற்றும் மத நம்பிக்கைகளைக் கடந்து நாம் செல்கின்றோம் என்றும், தங்களின் மதத் தனித்துவத்தை மறுதலிக்காமல், அதனைக் காப்பதற்காகப் போராடும் மக்களின் பக்கம் நம்மை இருத்துவோம் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் உள்ள கிறிஸ்தவர்களும், மற்ற சமயச் சிறுபான்மையினரும் தங்களது இறைநம்பிக்கையை முழுச் சுதந்திரத்துடன் கடைப்பிடிக்குமாறு செபிப்போம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.