2018-01-05 14:59:00

கத்தோலிக்கப் பள்ளிகளில் இந்துசமய வழிபாட்டைத் திணிப்பது..


சன.05,2018. இந்தியாவில், கத்தோலிக்கப் பள்ளிகளில் இந்துக் கடவுள்கள் வழிபாட்டைத் திணிக்க விரும்பும் அனைவரும், தேசபக்தர்கள் அல்ல, மாறாக, தேசபக்திக்கு எதிரானவர்கள் மற்றும் பயங்கரவாதி போன்றவர்கள் என்று, இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறினார்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் Vidishaவில் புனித மேரி கத்தோலிக்க கல்லூரிக்கு முன்பாக, அகில் பாரத்ய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் ஏறத்தாழ 900 உறுப்பினர்கள் கூடி, பாரத மாதாவுக்கு ஆரத்தி எடுப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிகழ்வையொட்டி ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்த, ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், இந்த அமைப்பினரின் இந்நடவடிக்கை, இந்திய அரசியல் அமைப்புக்கு முரணானது, சனநாயகத்திற்கு எதிரானது மற்றும், தனிப்பட்டவரின் சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது என்று குறை கூறினார்.

ஏறத்தாழ 900 பயங்கரவாதிகள், தங்களின் வழிபாட்டை நடத்துவோம் என்று, கல்லூரிக்கு முன்பாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும்வேளை, இந்நிலைமையைச் சீர்படுத்தி, பாதுகாப்பு அளிப்பதற்கென, இந்திய உள்துறை அமைச்சகம் 400 காவல்துறையினரை நிறுத்தியுள்ளதற்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார், ஆயர் மஸ்கரீனஸ்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.