2018-01-08 14:35:00

வாரம் ஓர் அலசல் : ஏழையின் கண்ணீர்வலி ஏழைக்கே புரியும்


சன.08,2018. ‘ஆண்டவனின் அற்புதப் படைப்பில் அசைக்க முடியாத அதிசயப் படைப்பு ஏழையின் கண்ணீர்’ என்கிறது ஒரு புதுக்கவிதை. உழைப்பைக் கொண்டு வறுமையை விரட்டலாம் என்றால், ஏழையின் உழைப்பைத் தாராளமாகப் பயன்படுத்தி, தடம் மாற்றும் சுயநலவாதிகளின் எண்ணிக்கைக்கு அளவேயில்லை என்று, ஓர் ஆர்வலர் மனம் நொந்து எழுதியிருக்கிறார். டாக்டர் அம்பேத்கார் சொன்னார் - என்னுடைய உழைப்பின் பலனை அனுபவித்து முன்னேறியவர்கள் படித்தவர்கள்தான். அவர்கள் முன்னேறியதும், சமூகத்தை வழிநடத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள், தங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்ளவே என்னைச் சுற்றி வந்தவர்கள் என்று, என்னுடைய இறுதிக்காலத்தில் உணர்ந்தேன். படித்தவர்கள் என்னை நன்றாக ஏமாற்றி விட்டார்கள் என்று. படித்தவர்கள், பணக்காரர்கள் போன்ற பலர் நெஞ்சில் சுரக்காத ஈரம், படிக்காத பாமரர்களில் வற்றாத ஊற்றாகிறது. மதுரையில் வாழ்கின்ற, வயது முதிர்ந்த காந்திமதி என்கின்ற அன்னபூரணி அம்மா நெஞ்சில் சுரக்கும் கனிவு, எண்ணெய் காணாத தலையும், எப்போதோ வெள்ளையாய் இருந்த வேட்டியும், கிழிசல் சட்டையும், பசியால் பஞ்சடைந்த கண்களையும் கொண்ட ஏறத்தாழ எழுபது பேரின் பசியை ஒவ்வொரு நாளும் அகற்றி வருகிறது. மதுரை கீழமாசி வீதி, தொலைப்பேசி எக்சேஞ்ச் நிலையத்துக்கு அருகில் உள்ள நடைபாதையில் காலை பத்து மணிக்கு, இவரின் உணவளிக்கும் நிகழ்வு நடக்கின்றது. இவர் மதுரை செல்லூரைச் சேர்ந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்தவர், இரண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். நான்கு குழந்தைகளுக்குத் தாய். குடும்ப வறுமை காரணமாக, கிராமத்திலிருந்து மதுரைக்கு இடம் பெயர்ந்த இவர், வீட்டு வேலை உள்ளிட்ட எந்த வேலை கிடைத்தாலும் செய்தார். பிள்ளைகளை வளர்த்தார். தன் சக்திக்கு ஏற்ப அனைவருக்கும் திருமணம் முடித்து வாழ வழிகாட்டிவிட்டார். அதன்பின்னர் நடந்ததை தினமலர் நாளிதழிடம் இவ்வாறு விவரிக்கிறார் அன்னபூரணி அம்மா.

வயதான காலத்தில் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க இயக்கம் எனக்கு ஆறுதல்தர, அடிக்கடி அங்கே செல்ல ஆரம்பித்தேன். அங்கே அன்பானந்தம் என்பவர், அன்றாடம் கிடைக்கும் சிறிதளவு வருமானத்திலேயே தர்மசாலை வைத்து நடத்தினார். நாள் தவறாமல் நன்கொடையாளர்கள் சிலரைப் பார்த்து, அரிசி பருப்பு வாங்கி வந்து சமைத்து பலருக்கும் சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்தார். வறியோரின் பசிப்பிணி தீர்க்கவேண்டியதன் அவசியத்தை நான் உணர்ந்தேன். அதனால் அவரிடம், கூலிவாங்காத, சமையல் தொழிலாளியாகச் சேர்ந்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், அன்பானந்தம் இறந்துவிட்டார். அவர் ஆரம்பித்த அன்னதான இயக்கத்தை யார் எடுத்து நடத்துவது என்ற கேள்வி வந்தபோது, யாரும் முன்வராத நிலையில், வள்ளலார் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையுடன், நானே நடத்துவது என முடிவு செய்தேன். என் வழிகாட்டி அன்பானந்தம் போலவே, அன்னதானத்திற்கு அரிசி பருப்பு காய்கறி போன்றவற்றைத் தானமாகக் கேட்கிறேன். முதல் நாள் மாலை என்ன கிடைக்கிறதோ அதை வைத்து மறுநாள் சமைத்துப் போட ஆரம்பித்தேன். மாற்றுத்திறனாளிகள், உழைத்து பிழைக்க முடியாதோர், மன நோயாளிகள், பிச்சை கிடைக்காதோர் போன்றவர்கள், வயிறார ஒருவேளை சாப்பிடட்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், இப்போது இந்த பகுதியில் உள்ள மூடைதுாக்கும் தொழிலாளர்களும் வருகின்றனர். இப்போது நான் கேட்காமலே சிலர், 'இந்த தாயி இந்த மாதம் என் பங்குக்கு இரண்டு மூட்டை அரிசி' என்ற முறையில், நன்கொடையாக கொடுத்து வருகின்றனர். மேலும், பலர் தங்கள் பிறந்த நாள், திருமண நாளன்று அன்றைய அன்னதானச் செலவை ஏற்றுக்கொள்கின்றனர். சிலநாள் எதுவும் கிடைக்காதபோது, அரிசி காய்கறிகளைக் கலந்து, கலவை சாதமாகப் போட்டுவிடுகிறேன். எப்படியும் என்னை நம்பி வந்தவர்களை பட்டினிமட்டும் போடமாட்டேன். பசியோடு இந்த இடத்திற்கு ஒரு ஜீவன் வரும்வரை கண்டிப்பாக இது தலைமுறைக்கும் தொடர வேண்டும்.

மதுரை அன்னபூரணி அம்மா போன்ற ஏழையர், தன்னைப் போன்ற ஏழையரின் கண்ணீர்வலியைப் புரிந்துகொள்கின்றனர்.

தமிழகத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், நான்காவது நாளாக, வேலைநிறுத்தத்தைத் நடத்தி வருகின்றனர். இச்சூழலில், திருச்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தம்பதி, கடந்த வெள்ளிக்கிழமை காலை திருச்சியிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர் வந்து, அங்கிருந்து ஆத்தூருக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரிடமும் சென்று, ஆத்தூருக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சும் தொனியில் கேட்டனர். ஏறத்தாழ அறுபது கி.மீ. தொலைவு செல்வதற்கு பலரும் தயங்கினர். அச்சமயத்தில், அதே பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டும், 29 வயது நிரம்பிய பாண்டியன், பரிதவித்த அந்த தம்பதியரை அணுகினார். “ஒரு முக்கியமான வழக்கு விடயமாக, காலை 10.30 மணிக்குள் ஆத்தூர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். உங்களால் வர இயலுமா? நீங்கள் கேட்கும் தொகையைத் தருகிறேன்”என்று அந்த வழக்கறிஞர் தம்பதியர் கூறினர். அதன்பின் நடந்ததைச் சொல்கிறார் பாண்டியன். “ஆட்டோவில் ஏறுங்கள் எனக் கூறி அவர்களை உட்காரவைத்துக் கொண்டு, அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அறுபது கி.மீ. தூரத்தைக் கடந்து, ஆத்தூர் நீதிமன்ற வாசலில் ஆட்டோவை நிறுத்தினேன். அந்த தம்பதியர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். “இப்போதுதான் மனது நிம்மதி அடைந்தது. தம்பி நீங்க பத்திரமா பார்த்து ஊருக்குப் போய்ச் சேருங்கள்”எனக் கூறி, கட்டணமாக 1,100 ரூபாயை என்னிடம் கொடுத்துவிட்டு வழக்கறிஞர் மேலாடையை, அவசர அவசரமாக அணிந்துகொண்டு நீதிமன்றத்துக்குள் ஓட்டமும் நடையுமாகச் சென்றனர். அந்த வழக்கறிஞர் தம்பதியர் தவித்ததைப் பார்த்தபோது, பணம் எனக்கு ஒரு விடயமாகத் தெரியவில்லை. ஏதாவது முக்கியமான வழக்கு விடயமாக ஆஜராகத்தான் அவர்கள் இவ்வளவு சிரமப்பட்டு திருச்சியிலிருந்து ஆத்தூர் செல்ல வந்திருக்க வேண்டும். அதனால் அவர்கள் கொடுப்பதைக் கொடுக்கட்டும் என்று முடிவு செய்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் நீதிமன்றத்தில் அவர்களைச் சேர்த்துவிட வேண்டும் என தீர்மானித்து ஆட்டோவில் அழைத்துச் சென்றேன். குறித்த நேரத்துக்குள் அவர்களை நீதிமன்றத்தில் விட்ட பின்னரே எனக்கும் மனம் நிறைவடைந்தது’என்கிறார் 29 வயது இளைஞர் பாண்டியன். வாழ்வில் துன்பங்களை அனுபவித்தவர்களே பிறர் அனுபவிக்கும் துன்பங்களை உணர்ந்து உதவுகின்றனர்.

கர்ம வீரர் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்த சமயம், அரசுப் பணியில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனிமேல் வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’என்று ஓர் உத்தரவு போட்டார். அச்சமயத்தில், பழைய சட்டமன்ற விடுதியில் கீழ்மட்ட ஊழியராக இருந்த, வெள்ளந்தியான மண்ணாங்கட்டி என்பவரின் வீட்டிற்கும், அந்த உத்தரவு கடிதம் சென்றது. இரண்டு நாள் கழித்து, பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்து, முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து, பித்துப் பிடித்தவராக கதறி அழுதார் மண்ணாங்கட்டி. ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடு. எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா என்றார் அவர். மண்ணாங்கட்டி தொலைபேசியை எடுத்த நேரத்தில், மறுமுனையில் முதல்வர் காமராஜ் அவர்களே பேசினார். முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் தொலைப்பேசியை எடுத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில், நான்தான் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க, ‘ஐயா, எழுதப்படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ, நான் பியூனா இருக்ககூடாதான்னு’தேவர் ஐயா கேட்கச் சொல்றாருங்க என்றார் மண்ணாங்கட்டி. அடுத்த முப்பது நிமிடத்தில் மண்ணாங்கட்டி முதல்வர் காமராஜர் அவர்கள்முன் நிறுத்தப்பட்டார். விவரம் அறிந்த மண்ணாங்கட்டி, ஐயா, நான் தெரியாமப் பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க என்றபடியே காலில் விழுந்தார். அந்தக் கலாச்சாரம் காமராஜருக்குப் பிடிக்காது. அதிகாரிகள் உடனே அவரை எழுப்பி நிற்க வைத்தார்கள். அவரை வா...வாண்ணே. வந்து பக்கத்தில் உட்காருங்க என்றழைத்த காமராஜர் அவர்கள், மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து, பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புப்பன்னிட்டேன். தெரியாமச் செய்திட்டேன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லையாமே. சமைக்கலயாமே.... உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’என்று, நான் உத்தரவு போட்டிருக்கணும், நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்ல, மண்ணாங்கட்டி கதறி அழுதாராம். அடுத்து காமராஜர், அங்கேயே புதிய உத்தரவிலும் கையொப்பமிட்டாராம். பின் அதிகாரிகளிடம், மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை கொடுக்க உத்தரவிட்டதோடு, அவர் வீட்டிலுள்ள எல்லாருக்கும் ஓட்டலில் சாப்பாடு வாங்கிக் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’எனக் கண்டிப்போடு கூறினாராம் காமராஜர். ஆம், ஓர் ஏழையின் கண்ணீர் வலி, ஏழையரின் உள்ளம் கொண்டிருந்த காமராஜர் அவர்களுக்குப் புரிந்திருந்தது.

ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும்போது அந்தக் கிளை எந்த நேரத்திலும் முறிந்துவிடும் என்ற பயத்தில் அமர்வதில்லை. ஏனென்றால் பறவை நம்புவது அந்தக் கிளையை அல்ல. மாறாக அதன் சிறகுகளை. குடிசைகள் கோபுரங்களாகும், சுமைகள் சுகங்களாகும், துன்பம் மகிழ்ச்சிகளாகும். வறுமை வசந்தமாகும் காலம் கனியும் என நம்புவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.