சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

உண்மை, நீதி, ஒத்துழைப்பு மற்றும் விடுதலையை உள்ளடக்கிய உறவு

அரசியல் தூதர்களிடம் உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். - ANSA

09/01/2018 13:23

சன.08,2018. முதல் உலகப் போர் நிறைவுக்கு வந்ததன் 100 ஆண்டுகள் சிறப்பிக்கப்படும் இவ்வேளையில், போர்களில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்தும், வேலை வாய்ப்பின்மைகள், குடும்பங்கள், இயற்கை பாதுகாப்பு போன்ற பல்வேறு சமூகச் சூழல்கள் குறித்தும், அரசியல் தூதர்களிடம் இத்திங்களன்று உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் நாட்டுடன் அரசியல் உறவு கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளின் தூதர்களை, இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெற்றி என்பதன் அர்த்தம், மற்றவரை தாழ்மைப்படுத்துவதல்ல என்பதும், அமைதி என்பது அச்சத்திலிருந்து பிறப்பதல்ல என்பதும், கடந்த கால போர்களிலிருந்து நமக்குப் பாடமாகக் கிட்டியுள்ளன என்றார்.

நாடுகளிடையே நிலவும் உறவு, உண்மை, நீதி, ஒத்துழைப்பு மற்றும் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, ஒவ்வொரு நாடும் சரி நிகர் மாண்புடன் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மனித உரிமைகள் குறித்த அனைத்துலக ஒப்பந்தம், ஐ.நா. பொது அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 70 ஆண்டுகள் தாண்டிய பின்னரும், மனிதரின் அடிப்படை உரிமைகள் பல்வேறு நாடுகளில் மீறப்பட்டு வருவது குறித்து தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரிய தீபகற்ப பதட்ட நிலைகள், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், இஸ்ராயேல்-பாலஸ்தீனம், தென்சூடான், காங்கோ குடியரசு, சொமாலியா, நைஜீரியா, மத்திய ஆப்ரிக்க குடியரசு, உக்ரைன் போன்ற நாடுகளின் இன்றைய நிலைகள் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

குடும்பங்களின் உரிமைகள், குடியேற்றதாரர், மற்றும், புலம்பெயர்ந்தோரின் துன்பங்கள் குறித்தும் அரசியல் தூதர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அகதிகளுக்குப் புகலிடம் கொடுக்கும் பங்களாதேஷ், இத்தாலி, கிரேக்கம், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு தன் நன்றியையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையை இளைஞர்களின் வேலை வாய்ப்பற்ற நிலைகள், மற்றும், மத சுதந்திரம் பல இடங்களில் மறுக்கப்படுதல் போன்ற கருத்துக்களையும் எடுத்துரைத்தார்.

உலகின் மிகச்சிறிய நாடாக விளங்கும் வத்திக்கான், 185 நாடுகள் மற்றும் அமைப்புக்களுடன் அரசியல் உறவைக் கொண்டுள்ளது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

09/01/2018 13:23