2018-01-09 14:16:00

இமயமாகும் இளமை - உங்கள் நாள் குப்பையற்ற நாளாக இருக்கட்டும்!


'குப்பையற்ற நாள்' (Garbage-free day) என்ற தலைப்புடன், சமூக வலைத்தளத்தில் வலம்வரும் ஒரு சிறுகதை இது. இந்தக் கதையை, ஓர் இளைஞர், தான் பெற்ற சொந்த அனுபவமாகக் கூறியுள்ளார்:

விமான நிலையம் செல்வதற்கு 'டாக்சி'யில் ஏறினேன். போகும் வழியில், திடீரென மற்றொரு கார், எங்கள் பாதையில் குறுக்கிட்டது. டாக்சி ஓட்டுனர் 'பிரேக்' அடித்து வண்டியை நிறுத்தினார். குறுக்கே வண்டியை ஒட்டி வந்தவர், தன் காரின் கண்ணாடியை இறக்கி, டாக்சி ஓட்டுனரைப் பார்த்து கத்தினார். நான் பயணம் செய்த டாக்சியின் ஓட்டுனரோ, அவரைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்தார். கத்திக்கொண்டிருந்தவர், எதோ முணுமுணுத்தபடியே, தன் காரை ஒட்டிச் சென்றார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த நான், "தப்பு செய்தது அவன். அவனைப் பார்த்து ஏன் கையசைத்து புன்னகை செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். அப்போது, அந்த டாக்சி ஓட்டுனர் சொன்னது, அழகான ஒரு பாடம். அந்தப் பாடத்திற்கு, 'குப்பை லாரி விதிமுறை' (The Law of the Garbage Truck) என்று பெயரிட விழைகிறேன். டாக்சி ஓட்டுனர் சொன்னது இதுதான்:

"நம்மைச் சுற்றியுள்ள பலர், குப்பை லாரிகளைப் போன்றவர்கள். எரிச்சல், வருத்தம், ஏமாற்றம் என்று பல குப்பைகளைச் சுமந்து அலைகின்றனர். குப்பைகள் கூடக் கூட, அதை எங்காவது கொட்டவேண்டும் என்று துடிக்கின்றனர். சிலவேளைகளில், தங்கள் குப்பையை, அவர்கள், உங்கள் மீது கொட்டிவிடுவர். அவ்வேளைகளில், புன்னகையோடு அவர்களுக்குக் கையசையுங்கள். அவர்கள் கொட்டிய குப்பையை நீங்கள் சுமந்து சென்று, உங்கள் அலுவலகம், அண்டைவீடு, முக்கியமாக, உங்கள் குடும்பம் என்ற இடங்களில் அந்தக் குப்பையைப் பரப்பாதீர்கள்" என்று கூறினார், டாக்சி ஓட்டுனர்.

இந்தக் கதையை வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டவர், இறுதியில் கூறும் ஒரு வாழ்த்துரை இதுதான்: இன்று, உங்கள் நாள், குப்பையற்ற நாளாக இருக்கட்டும்!

ஊரில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றும் இளையோர் அணிகளைப் பற்றி செய்திகளில் வாசிக்கிறோம். பெருமிதம் கொள்கிறோம். அதே வேளையில், இளையோர், தங்கள் உள்ளங்களில் குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.