2018-01-09 15:21:00

இமயமாகும் இளமை : நம்பிக்கை நட்சத்திரம் பாலுசாமி


மதுரை, பழங்காநத்தத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் வடிவேல் பாலுசாமி,   மெக்கானிக்கல் சான்றிதழ் படிப்பு முடித்தவர். இவருக்கு, கடந்த 2012ம் ஆண்டில் வெளிநாடு ஒன்றில் வேலை கிடைத்தது. ஆனால், இவர் வெளிநாடு புறப்படுவதற்கு சில நாள்களுக்குமுன், ஒரு விபத்தில் சிக்கி இடது காலை இழந்தார். ஓராண்டு படுத்த படுக்கையாக இருந்த பாலுசாமி, இப்படி முடங்கிக்கிடப்பதற்கா நான் பிறந்தேன் என்று சிந்தித்தார். பின்னர், செயற்கை கால் பொருத்திக்கொண்டு நடக்கவும் ஓடவும் பயிற்சி எடுத்தார். உள்ளூரிலேயே ஒரு வேலையைத் தேடிக்கொண்ட இவர், மீண்டும் இரு சக்கர வாகனம் ஓட்டவேண்டும் என்ற ஆசையை பெற்றோரிடம் வெளிப்படுத்தினார். ஆனால் பெற்றோர், 'ஸ்கூட்டி' போன்ற வாகனத்திற்கு, சிறிது அச்சமுடன் ஒப்புதல் தெரிவித்தனர். ஆனால் பாலுசாமியின் விருப்பம் புல்லட்டாக இருந்தது. இதைக் கேட்ட பெற்றோர் மட்டுமல்ல, உற்றமும் நட்பும்கூட மிரண்டு போனது. ஆனாலும் தனது இலட்சியத்தில் உறுதியாக இருந்து, புல்லட் மோட்டார்சைக்கிள் வாங்கினார் பாலுசாமி. சாதாரண மனிதர்கள் ஓட்டுவது போலவே அதை அவர் ஓட்டினார். இவருக்கு, மோட்டார் வாகனத்தில் நீண்ட துாரம் போகும் ப்ரீடம் மோட்டார்சைக்கிள் கழகத்தின் அறிமுகம் கிடைத்தது. இதன் பயனாக, பதினைந்து நாட்களில், தன்னந்தனியாக, இந்தியா முழுவதும், 6,723 கிலோ மீட்டர் துாரம் சுற்றிவந்து சாதனை படைத்தார். இவரது இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்திலும், இந்திய சாதனையாளர் புத்தகத்திலும் இடம்பெற்றது. அடுத்து கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிள் பயணம் செல்லவேண்டும் என்பது இவரது விருப்பம். அதன் முன்முயற்சியாக, தன் நண்பர்களுடன், கடந்த டிசம்பர் 23ந்தேதி காலை 4.30 மணிக்கு மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அன்று இரவு 9.30 மணிக்கு கன்னியாகுமரியைச் சென்றடைந்தார். இந்த வெற்றிப் பயணத்தையடுத்து, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை முதலில் மோட்டார் சைக்கிள் பயணம், பின் சைக்கிள் பயணத்திற்குத் தயாராகி வருகிறார் பாலுசாமி. ஓய்வு கிடைக்கும்போது பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இளைஞர் வடிவேல் பாலுசாமி சொல்கிறார்:நடந்ததையே நினைத்துக்கொண்டிருக்காமல், அடுத்து என்ன செய்வது என்று பார்க்க வேண்டும். அதுதான் வாழ்க்கை என்று.      

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.