2018-01-09 11:45:00

திருத்தந்தையின் சந்திப்புக்கு காத்திருக்கும் அமசான் பழங்குடி


சன.08,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் தென் அமெரிக்காவின் சிலே மற்றும் பெரு நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது, திருத்தந்தையைச் சந்தித்து சில விண்ணப்பங்களை வைக்க, அமசோன் பகுதி பழங்குடியினர் ஆவல் கொண்டுள்ளதாக, அப்பகுதியின் அருள்பணியாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

புவெர்த்தோ மல்தொனாதோ பகுதியில், திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது, தங்கள் மூதாதையரின் நிலங்களும், வாழ்க்கை முறைகளும் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவருவது குறித்த புகாரை அவரிடம் சமர்ப்பிக்க, இப்பழங்குடியினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார், அருள்பணி மானுவேல் ஹேசூஸ் ரொமேரோ.

தங்கள் மூதாதையரின் நிலங்கள் சுருங்கிப் போவது மட்டுமல்ல, அவர்களின் தொழில்களான மீன் பிடித்தல், வேட்டையாடுதல், மற்றும், அவர்கள் வளர்த்த மரங்கள், பயன்படுத்திய ஆறுகள் போன்றவை ஆபத்துக்கு உள்ளாக்கப்படுவதாக அமசோன் பழங்குடியினர் எடுத்துரைத்துள்ளனர்.

இம்மாதம் 19ம் தேதி புவெர்த்தோ மல்தொனாதோவில் அமசோன் பகுதி மக்களையும், அவர்களின் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.