2018-01-09 13:02:00

பலவீனர்களை அவமானப்படுத்தத் தூண்டுவது சாத்தானின் வேலை


சன.08,2018. வலிமையுடையோர், ஏழைகளை தாழ்மைப்படுத்த நினைப்பது என்பது சாத்தானின் வேலை, ஏனெனில், சாத்தான் இரக்கமற்றவன் என இத்திங்கள் காலை திருப்பலி மறையுரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளின் முதல் வாசகத்தில், எல்கானாவின் இரு மனைவியருள் ஒருவர், மற்றவரை அவமானப்படுத்தி, தாழ்மைப்படுத்தும் நிலை குறித்து வாசிக்கப்பட்டதை மையமாகக் கொண்டு தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதேப் போன்று, விவிலியத்தின் பல்வேறு பகுதிகளில், ஒருவர் மற்றவரை அவமானப்படுத்தி தாழ்மைப்படுத்த முயலும் நிலைகள் உள்ளன என்பதை உதாரணங்களுடன் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நம்முள் எழ காரணம் என்ன என்ற கேள்வியை முன்வைத்தார்.

தான் சிறுவனாக இருந்தபோது, மனநலம் குன்றிய ஒரு மூதாட்டியை, ஏனைய சிறார்கள் கேலி பேசி விளையாடியதையும் நினைவு கூர்ந்து பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, சிறார்களிடம் கூட இந்நிலை இன்றும் தொடர்கிறது என்ற கவலையையும் வெளியிட்டார்.

நற்செயல்களை ஆற்ற தூய ஆவியானவர் எவ்வாறு நம்மைத் தூண்டுகிறாரோ, அதைப்போல், பலவீனமானவர்களை தாக்கும் மனப்போக்கு தீயோனாகிய சாத்தானால் தூண்டப்படும் ஒன்றாக உள்ளது என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.