சன.10,2018. வாழ்க்கை அதிகாரத்தைச் சார்ந்தது அல்ல, நாம் அதிகாரம் ஏதுமின்றி பிறந்தோம், இறக்கும்போதும் எவ்வித அதிகாரமும் நம்மிடம் இருக்காது என்று மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் சனவரி 9, இச்செவ்வாயன்று மறையுரை வழங்கினார்.
பிலிப்பீன்ஸ் நாட்டில் அதிகம் புகழ்பெற்ற திருவிழாவான, கருப்பு நாசரேன் (Black Nazarene) திருவிழாவின் நிறைவுத் திருப்பலியை, மணிலாவின் Quiapo துணை பேராலயத்தில் நிறைவேற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
டிசம்பர் 31ம் தேதியன்று துவக்கப்பட்ட கருப்பு நாசரேன் நவநாள் முயற்சிகள், சனவரி 8ம் தேதி இரவு நடைபெற்ற ஊர்வலம், மற்றும் நள்ளிரவு திருப்பலியுடன் நிறைவுற்றது.
பிலிப்பீன்ஸ் நாட்டில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் Gabriele Giordano Caccia அவர்களும், ஏனைய ஆயர்களும், ஆயிரக்கணக்கான அருள்பணியாளர்களும் பங்கேற்ற இத்திருப்பலியில், 2 இலட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
1607ம் ஆண்டு, இஸ்பானிய நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒருவரால் பிலிப்பீன்ஸ் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கருப்பு நாசரேன் திரு உருவம், 1767ம் ஆண்டு முதல், ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு வந்துள்ளது என்பதும், இந்த உருவத்திற்கு புதுமைகள் ஆற்றும் சக்தி உள்ளதென்று பாரம்பரியம் சொல்வதும் குறிப்பிடத்தக்கன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
சமூக வலைத்தளங்கள்: