சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

திருத்தந்தை:நற்செய்தியின் மகிழ்வின் திருப்பயணியாக வருகிறேன்

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் - ANSA

10/01/2018 12:52

சன.09,2018. நற்செய்தியின் மகிழ்வின் திருப்பயணியாகவும், ஆண்டவரின்  அமைதியை உங்கள் எல்லாருடனும் பகிர்ந்துகொள்ளவும், அதே நம்பிக்கையில் உங்களை உறுதிப்படுத்தவும் உங்களிடம் வருகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்

சனவரி 15, வருகிற திங்களன்று சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு, திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், அன்புகலந்த வாழ்த்துடன் செய்தியைத் தொடங்கியுள்ளார்.

உங்களைச் சந்தித்து, உங்கள் கண்களை உற்றுநோக்கி, உங்கள் பார்வையிலும், பலத்திலும் உங்களோடு இணையவும், நம்மை அணைத்து ஆறுதலளிக்கும் கடவுளின் அருகாமை, கனிவு மற்றும் இரக்கத்தை அனுபவிக்கவும், உங்கள் மண்ணில் நான் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.

உங்கள் நாடுகளின் வரலாற்றை அறிந்திருக்கும் நான், உங்களோடு சேர்ந்து இறைவனுக்கு நன்றிகூர விரும்புகிறேன் என்றும், வீணாக்கும் கலாச்சாரம் ஒவ்வொரு முறையும் அதிகமதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, நீங்கள் எதிர்கொள்ளும் துன்பம், கவலை, நம்பிக்கை இன்பம் ஆகிய அனைத்திலும் நீங்கள் தனியாக இல்லை, உங்களுடன் திருத்தந்தையும், திருஅவையும் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இறைவனிடமிருந்து வரும் அமைதியை உங்களோடு சேர்ந்து நான் அனுபவிக்க விரும்புகிறேன் என்றும், கிறிஸ்துவின் கொடையாக நமக்கு வழங்கப்படும் அமைதி, சமுதாயத்தின் நல்லிணக்க வாழ்வுக்கு அடித்தளம் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

அமெரிக்காவின் அன்னையாம் புனித கன்னி மரியின் கரங்களில் உங்களையும், உங்களின் அனைத்து ஏக்கங்களையும் அர்ப்பணிக்கின்றேன் என்றும், எனக்காகச் செபிக்க மறவாதீர்கள் என்றும், காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை சிலே நாட்டிலும், பின்னர், 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பெரு நாட்டிலும் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றவுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருத்தூதுப் பயணம், அவரின் 22வது வெளிநாட்டுப் பயணமாக அமைகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

10/01/2018 12:52