2018-01-10 13:21:00

கொரிய நாடுகளுக்கிடையே நடந்த கலந்துரையாடலின் வெற்றிக்கு..


சன.09,2018. வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்கள் வெற்றியடைந்தது குறித்து, தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளார், தென் கொரிய தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப்பின், தென் மற்றும் வட கொரிய நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு இடையே முதன்முறையாக நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றி பெறுவதற்கு, கொரியத் திருஅவை செபித்தது மற்றும் தொடர்ந்து செபித்து வருகின்றது என்று, கூறியுள்ளார், தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு தலைவராகிய, தெஜோன் ஆயர் Lazarus You Heung-sik.

Panmunjom என்ற கிராமத்தில் நடந்த இக்கலந்துரையாடல், இவ்விரு நாடுகளின்  குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு உதவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ள ஆயர், இந்நாடுகளின் அரசுத்தலைவர்களையும் பாராட்டியுள்ளார்.

இதற்கிடையே, இச்செவ்வாயன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு, தன் விளையாட்டு வீரர்களை அனுப்புவதற்கு வட கொரியா இசைவு தெரிவித்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

வருகிற பிப்ரவரி 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை, தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளில், வட கொரிய விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் உட்பட பிரதிநிதிகள் குழு ஒன்று கலந்துகொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏறத்தாழ இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ ஹாட்லைன் தொடர்புகள் இப்புதனன்று மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.