2018-01-10 11:52:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 8


சன.10,2018. கிறிஸ்தவ உலகில், கி.பி.325ம் ஆண்டு முதல், 870ம் ஆண்டு வரை, எட்டுப் பொதுச் சங்கங்கள் நடைபெற்றுள்ளன. இவை அனைத்தும், கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகராக விளங்கிய கான்ஸ்தாந்திநோபிள் நகரிலும், அதையடுத்த நகரங்களிலும் நிகழ்ந்தன. இப்பொதுச்சங்கங்கள், உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பட்டன. கிறிஸ்தவ நம்பிக்கை உண்மைகளை வரையறுப்பதே இவற்றின் முக்கிய நோக்கமாக இருந்தது. கி.பி.431ம் ஆண்டில், தற்போதைய துருக்கி நாட்டின் Selcuk என்ற நகருக்கு அருகிலுள்ள எபேசு நகரில் நடைபெற்ற பொதுச்சங்கம், உரோமைப் பேரரசர் 2ம் தெயோதோசியுஸ் அவர்களால் கூட்டப்பட்டது. அக்காலத்தில் கிறிஸ்தவ உலகில் பணியாற்றிய அனைத்து ஆயர்களும் எபேசு நகரில் கூடிய இந்த அவை, திருஅவையில் நடைபெற்ற மூன்றாவது பொதுச்சங்கம் ஆகும். முதல் பொதுச்சங்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீசேயா விசுவாச அறிக்கை இந்த மூன்றாவது பொதுச்சங்கத்தில் உறுதி செய்யப்பட்டது.

கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தையாகப் பணியாற்றிய நெஸ்டோரியுஸ் என்பவரின், அன்னை மரியா பற்றிய போதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நெஸ்டோரியுஸ், கிறிஸ்துவின் மனித மற்றும் இறை இயல்புகளைப் பிரித்துப் பேசினார். அன்னை மரியாவை, கிரேக்கத்தில் Christotokos அதாவது கிறிஸ்துவைப் பெற்றவர் என்று அழைக்கலாமேயொழிய, அவரை Theotokos அதாவது, இறைவனைப் பெற்றவர் என்று அழைக்க முடியாது என்று நெஸ்டோரியுஸ் போதித்தார். நெஸ்டோரியுசின் அன்னை மரியா பற்றிய இப்போதனை, திருஅவைத் தலைவர்களிடையே மோதலை உருவாக்கியது. குறிப்பாக, அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தந்தை புனித சிரில், இப்போதனையைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில் பணியாற்றிய திருத்தந்தை முதலாம் செலஸ்டீன், நெஸ்டோரியுஸ் தன் போதனையைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது அவர் திருஅவையைவிட்டு விலக்கப்பட வேண்டும் என்றார். இந்தப் பணியை முதுபெரும் தந்தை சிரில் அவர்களிடம் திருத்தந்தை ஒப்படைத்தார். இதனால் கலக்கமடைந்த நெஸ்டோரியஸ், பொதுச்சங்கத்தைக் கூட்டுமாறு பேரரசரிடம் கேட்டுக்கொண்டார். தனது போதனை உண்மை என்று நிரூபிக்கப்படும் மற்றும் முதுபெரும் தந்தை சிரில் கண்டனத்துக்கு உள்ளாவார் என்று நெஸ்டோரியுஸ் நம்பினார். இந்த விவகாரம் தொடர்பாக, பேரரசர் 2ம் தெயோதோசியுஸ், பொதுச்சங்கத்தைக் கூட்டினார். எபேசு நகரில் மரியா ஆலயத்தில் கி.பி.431ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் முடிய பொதுச்சங்கம் நடைபெற்றது. இதில் ஏறத்தாழ 250 ஆயர்கள் கலந்துகொண்டனர். ஆயர்கள், நெஸ்டோரியுஸ் போதனையைக் கடுமையாக எதிர்த்தனர். முதுபெரும்தந்தை சிரிலுக்கும், பேரரசர் 2ம் தெயோதோசியுசுக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இறுதியில் முதுபெரும்தந்தை சிரில் அவர்களின் வாதம் வென்றது. புனித கன்னி மரியா, கிறிஸ்துவின் அன்னை என அழைக்கப்படாமல், இறைவனின் அன்னை என அழைக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர். எனவே எபேசு பொதுச்சங்கத்தில் அன்னை மரியா, இறைவனின் அன்னை என அறிவிக்கப்பட்டார். நெஸ்டோரியுசின் பதவி பறிக்கப்பட்டது. அவரின் போதனைகளும் கண்டனத்துக்கு உள்ளாயின. இதனால் திருஅவையில் நெஸ்டோரியுஸ் பிரிவினை ஏற்பட்டது. அவருக்கு ஆதரவளித்த திருஅவைகள், குறிப்பாக, பெர்சிய பேரரசில் இருந்தவர்கள், பிற கிறிஸ்தவ உலகத்திலிருந்து தண்டிக்கப்பட்டனர். இவர்கள், நெஸ்டோரியன் கிறிஸ்தவம் அல்லது கீழைத் திருஅவை என்ற பெயரில், மற்ற கிறிஸ்தவர்களிடமிருந்து பிரிந்தனர். இவர்கள் தற்போது, கீழை அசீரிய திருஅவை, கீழை பழங்காலத் திருஅவை, கல்தேய சிரியன் திருஅவை, கல்தேய கத்தோலிக்கத் திருஅவை ஆகியவற்றில் உள்ளனர். நெஸ்டோரியுஸ், தனது வாழ்வின் இறுதிக்காலத்தை ஒரு துறவு ஆதீனத்தில் இருந்தாலும், இறுதிவரை தனது கொள்கையில் உறுதியாய் இருந்தார் எனச் சொல்லப்படுகிறது.

புனித கன்னி மரியா, இறைவனோடு கொண்டுள்ள தனிப்பட்ட உறவு, மனிதரின் மீட்பில் அவரின் பங்கு ஆகிய இரண்டின் அடிப்படையில், அன்னை மரியா பற்றிய நான்கு விசுவாச உண்மைகள் திருஅவையில் அறிவிக்கப்பட்டன. அவற்றில் முதலாவதாக இருப்பது, கி.பி.431ம் ஆண்டில் எபேசு பொதுச்சங்கத்தில் அன்னை மரியா, இறைவனின் அன்னை என அறிவிக்கப்பட்ட விசுவாச உண்மையாகும். மரியின் இறைத்தாய்மை, கி.பி.451ம் ஆண்டில் நடைபெற்ற கால்சிதோன் பொதுச்சங்கத்தில் மேலும் விவரிக்கப்பட்டது. மேலும், அன்னை மரியா, இறைவனின் அன்னை என அறிவிக்கப்பட்ட எபேசு பொதுச்சங்கம் முடிந்தபின் உடனடியாக கட்டப்பட்ட உரோம் நகரிலுள்ள புகழ்பெற்ற மேரி மேஜர் பசிலிக்கா, புனித கன்னி மரியாவை மேன்மைப்படுத்தும் விதமாக முதலில் கட்டப்பட்ட ஆலயங்களில் ஒன்றாகும். திருத்தந்தை 3ம் சிக்ஸ்துஸ் அவர்கள், எபேசு பொதுச்சங்கத் தீர்மானத்தை நினைவுகூரும் விதமாக இந்த பசிலிக்காவைக் கட்டினார்.

மரியா இறைவனின் அன்னை, மரியா எப்பொழுதும் கன்னி, மரியின் பாவமில்லாமல் பிறந்தவர், மரியின் விண்ணேற்பு ஆகியவை, அன்னை மரியா பற்றிய நான்கு விசுவாச உண்மைகள் ஆகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.