2018-01-10 12:28:00

செபிக்காத மேய்ப்பர் மக்களுக்கு நெருக்கமாக இருக்க இயலாது


சன.09,2018. மேய்ப்பரின் அதிகாரம், இறைவனுக்கும் மக்களுக்கும் நெருக்கமாக இருப்பதிலிருந்து வருகின்றது என்று, இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதிகாரம் கொண்டவர் போன்று இயேசு போதிப்பது பற்றிக் கூறும், இந்நாளைய மாற்கு நற்செய்தி வாசகத்தை (மாற்.1,21-28) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உணர்வு, அருகாமை, சீரான வாழ்வு ஆகியவை, மேய்ப்பர் மற்றும் அவரின் அதிகாரத்தின் மூன்று பண்புகள் என்று கூறினார்.

இயேசுவின் புதிய போதனை, இறைத்தந்தையிடமிருந்து பெற்ற, அதிகாரம் எனும் கொடையிலிருந்து வருவது என்றும், மறைநூல் அறிஞர்களும் சட்ட வல்லுஞர்களும் உண்மையைக் கூறினாலும், அவர்கள் கூறியது மக்களின் இதயங்களைத் தொடவில்லை என்றும் உரைத்த திருத்தந்தை, இயேசுவின் போதனை, மக்கள் மனங்களில் வியப்பை உருவாக்கி அவர்களைத் திகைக்க வைத்தது என்றும் கூறினார்.

இயேசு அதிகாரம் கொண்டிருந்தார், ஏனென்றால் அவர் மக்களின் பிரச்சனைகள், துன்பங்கள் மற்றும் பாவங்களைப் புரிந்துகொண்டவராய், அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தார் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேய்ப்பருக்கு அதிகாரத்தைக் கொடுப்பது அல்லது அதிகாரத்தை அவரில் தட்டியெழுப்புவது, செபத்தில் அவர் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பதிலிருந்து வழங்கப்படுவதாகும் என்றும் கூறியத் திருத்தந்தை, செபிக்காத மற்றும், இறைவனைத் தேடாத மேய்ப்பர், மக்களுக்கு நெருக்கமாக இருக்க இயலாது என்றும் உரைத்தார்.

அதிகாரம் இறைவனின் கொடை, இது இறைவனிடமிருந்து வருகின்றது என்றும், அதிகாரம் என்பது இரட்டை வாழ்வு அல்ல, அது சீரான வாழ்வு என்றும், மேய்ப்பர் அதிகாரத்தை இழந்தால், நம்பிக்கை இழக்க வேண்டாமென்றும், ஏனென்றால், அதனை மீண்டும் உயிர்பெறச்செய்ய எப்போதும் காலம் உள்ளது என்றும் மறையுரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.