2018-01-10 13:13:00

பெரு திருத்தூதுப் பயணத்திற்கு கைதிகள் 3 இலட்சம் செபமாலைகள்


சன.09,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, அந்நாட்டின் பன்னிரண்டு சிறைகளிலுள்ள கைதிகள், மூன்று இலட்சம் செபமாலைகளைத் தயாரித்துள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது.

பெரு நாட்டின் திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்களில், அந்நாட்டின் கைதிகளையும் ஈடுபடுத்தும் நோக்கத்திலும், இத்திருத்தூதுப் பயணத்திற்கு ஆகும் செலவுகளுக்கு உதவும் வகையிலும், லீமா உயர்மறைமாவட்டத்தின் ஒத்துழைப்புடன், பெரு நாட்டின் தேசிய சிறை சீர்திருத்த நிறுவனம், செபமாலைகள் தயாரிக்கும் பணிகளில் கைதிகளை ஈடுபடுத்தியது.

இந்தச் செபமாலைகளை விற்ற பணத்திலிருந்து கிடைக்கும் தொகை, இவற்றைத் தயாரித்த கைதிகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்று, திருத்தந்தையின் லீமா திருத்தூதுப் பயணத் தயாரிப்புகளுக்குப் பொறுப்பான, அருள்பணி லூயிஸ் கஸ்பார் உரிபே அவர்கள் தெரிவித்தார்.

பெரு நாட்டின் Virgen de Fátima சிறையில், எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துள்ள Martha Hualinga அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு செபமாலையைத் தயாரித்தபோது மிகுந்த அர்ப்பணத்தோடும், தனது வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையிலும் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.