சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

திருத்தந்தை : கிறிஸ்தவ செபம் துணிச்சல் மிக்கது

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

12/01/2018 14:21

சன.12,2018. இயேசுவில் நம் விசுவாசமும், பல புனிதர்கள் போன்று, இன்னல்கள் நேரத்தில் அவற்றையும் கடந்து செல்லும் நம் துணிச்சலும், கிறிஸ்தவ செபத்தை எடுத்துக்காட்டும் பண்புகள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று மறையுரையில் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கும் இத்திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

தொழுநோயாளரும், முடக்குவாதமுற்றவரும் குணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் பற்றிக்கூறும் மாற்கு நற்செய்தி வாசகங்களை நினைவுகூர்ந்து, இவ்விருவருமே, விசுவாசத்துடன் குணம்பெற மன்றாடினர் என்றுரைத்த திருத்தந்தை, இயேசு போதிப்பதுபோன்று விசுவசிப்பவர்களுக்கு எல்லாமே இயலும் என்று கூறினார்.

செபம் செய்யும் முறைகள் குறித்து கேள்வி எழுப்புமாறு நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும், நாம் செபத்தை கிளிகள் போலின்றியும், எதைக் கேட்கிறோம் என்பதில் ஆர்வமின்றியும் செய்வதில்லை, மாறாக, நம் இன்னல்களின் மத்தியிலும்கூட, நம்மிலுள்ள சிறிதளவு விசுவாசத்துடன், ஆண்டவரிடம் கெஞ்சுகின்றோம் என்றும் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நமது செபம் துணிச்சலின்றி இருந்தால், அது கிறிஸ்தவ செபம் அல்ல என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித அகுஸ்தீனாரின் அன்னை, புனித மோனிக்கா, தன் மகனின் மனமாற்றத்திற்காக அழுது அழுது செபித்தார், இறுதியில் தான் கேட்டதைப் பெற்றார் என்றும் கூறினார்.

இயேசுவில் கொண்டுள்ள விசுவாசத்திலிருந்து பிறக்கும் கிறிஸ்தவ செபம், இன்னல்களையெல்லாம் கடந்து விசுவாசத்தோடு எப்போதும் செல்கிறது என்றும், செபம் துணிச்சல் மிக்கதாய் இல்லாவிட்டால், அது கிறிஸ்தவ செபம் இல்லையென்றும், தந்தை ஆபிரகாமின் விசுவாச வாழ்வை எடுத்துக்காட்டாகப் பின்பற்றுவோம் என்றும் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

12/01/2018 14:21