2018-01-12 10:02:00

கிறிஸ்தவ விசாவாசம் புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு தூண்டுகின்றது


சன.11,2018. பிரான்ஸ் நாட்டுக்கு வருகின்ற புலம்பெயர்ந்தோரை ஏற்று வாழ வைப்பது, காலத்தின் கட்டாயம் என்பதையோ அல்லது, அம்மக்கள், நாட்டின் வாழ்வில் ஆழமான வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்பதையோ, வருங்காலம்தான் பதில் சொல்லும் என்று, பிரான்ஸ் திருஅவை கூறியுள்ளது.

சனவரி 14, வருகிற ஞாயிறன்று உலக புலம்பெயர்ந்தோர் நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய, பிரான்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், Marsiglia பேராயர், Georges Pontier அவர்கள், புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு, கிறிஸ்தவ விசுவாசம் நம்மைத் தூண்டுகின்றது என்று கூறினார். 

பிரான்ஸ் நாடு, உலகின் அனைத்துத் துன்பங்களையும் ஏற்க இயலாது என்று அடிக்கடி பேசப்படுகின்றது என்றும், உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், இன்னும் பலரை ஏற்க இயலாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ள பேராயர், Pontier அவர்கள், அடைக்கலம் பெறுவதற்கு உரிமையில்லாத அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதை ஆயர்கள் மறுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

அந்நியரே, நம் சகோதரத்துவ மனிதாபிமானத்தைப் பரிசோதிப்பவர் என்று விவிலியம் சொல்கின்றது என்று கூறிய பேராயர், Pontier அவர்கள், பிரான்ஸ் கத்தோலிக்கர் மற்றும் குடிமக்கள் பலர், புலம்பெயர்ந்தோரை ஏற்பதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் அடைக்கலம் தேடி விண்ணப்பித்திருந்தனர் என்றும், இந்நாட்டில் புகலிடம் தேடுவோரில் அல்பேனிய நாட்டினர் முதலிடத்தில் உள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.