2018-01-12 15:01:00

சிலே, பெரு திருத்தூதுப்பயணம், பூர்வீக இனத்தவருக்காக...


சன.12,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிலே, பெரு நாடுகளின் திருத்தூதுப்பயணம், இவ்விரு நாடுகளின் ஏழைகள், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் போன்றோர் வாழ்கின்ற பகுதிகளில் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பிரச்சனையுள்ள இடங்களிலும் நடைபெறும் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் கிரெக் பர்க் அவர்கள், கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணம் பற்றி இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் விளக்கிய கிரெக் பர்க் அவர்கள், பதட்டநிலைகளுக்கும், வன்முறைக்கும்கூட இட்டுச்செல்லும் பூர்வீக இன மக்களின் நில உரிமை விவகாரம் இடம்பெறும் இடங்களுக்கும் திருத்தந்தை செல்வார் என்று கூறினார்.

சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு, இம்மாதம் 15ம் தேதி முதல், 22ம் தேதி வரை திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் நிறைவடையும்போது, திருத்தந்தை, 33 நாடுகளைப் பார்வையிட்டிருப்பார் என்றும், பர்க் அவர்கள் தெரிவித்தார்.

திருத்தந்தை, தனது நவதுறவு வாழ்வில், சிலே நாட்டில் ஒன்றரை ஆண்டுகள் செலவிட்டுள்ளார் என்றும், பல்வேறு தருணங்களில் பெரு நாட்டை பார்வையிட்டுள்ளார் என்றும், இந்நாடுகளின் எல்லா ஆயர்களையும் திருத்தந்தை அறிந்திருக்கின்றார் என்றும், கூறினார் பர்க்.

திருத்தந்தையின் இத்திருத்தூதுப்பயணம், மேய்ப்புப்பணி பயணமாக அமையும் என்றும், இப்பயணத்தில், சுற்றுச்சூழல் மற்றும், பூர்வீக இன மக்களின் விவகாரங்கள் முக்கிய இடம்பெற்றிருக்கும் என்றும், திருப்பீட செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.