2018-01-13 15:32:00

104வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாள்


சன.13,2018. 104வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாளான, சனவரி 14, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இந்த உலக நாளை முன்னிட்டு, வத்திக்கானின் லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளுக்குப் பேட்டியளித்த, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் அலுவலகத்தின் நேரடிப் பொதுச்செயலர், இயேசு சபை அருள்பணி Michael Czerny அவர்கள், புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு திருஅவை ஆற்றிவரும் பணிகள் பற்றி விளக்கியுள்ளார்.

கடந்த நூற்றாண்டில், தனது பெற்றோர் முன்னாள் செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து வெறுங்கையோடு கானடாவில் குடிபெயர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள அருள்பணி Czerny அவர்கள், மனிதர் புலம்பெயர்வது, முழுவதும் சாதாரணமானது மற்றும் அது, வரலாற்று நிகழ்வு என்று கூறியுள்ளார்.

வரலாற்றில் இடம்பெற்றுள்ள புலம்பெயர்வு குறித்து திருஅவை சிந்திக்க வேண்டும் மற்றும், புலம்பெயர்ந்தோரில், தான் காணும் உண்மை நிலை பற்றி உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார், அருள்பணி Czerny .

மக்கள் தங்கள் நாடுகளையும், உடைமைகளையும் விட்டுவிட்டு, கட்டாயமாக வெளியேறுவதன் காரணங்களை நாம் கண்டுணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அருள்பணி Czerny அவர்கள், வன்முறை, அடக்குமுறைகள், இயற்கைப் பேரிடர்கள் ஆகியவை தவிர, வளங்கள் அதிகப்படியாக நுகரப்படுதலும், சுரண்டப்படுதலும், மக்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுதலும் காரணங்களாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.