2018-01-13 15:16:00

ஆண்டவரின் குரலுக்கு நம் இதயங்களைத் திறந்துவைக்க வேண்டும்


சன.13,2018. “நம்மை அழைக்கும் ஆண்டவரின் அழைப்புக்குப் பதிலளிப்பதற்குமுன், நாம்  குறைபாடற்றவர்களாய் ஆகுவதற்காகக் காத்திருக்கக் கூடாது, மாறாக, ஆண்டவரின் குரலுக்கு நம் இதயங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

மேலும், சனவரி 15, வருகிற திங்களன்று, சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு, தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற திங்கள் உரோம் நேரம் காலை 7.50 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை 8.30 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஆல்இத்தாலியா B777 விமானத்தில், சிலே நாட்டுத் தலைநகர் சந்தியாகோ நகருக்குப் புறப்படுவார்.

15 மணி, 40 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து சந்தியாகோ நகரை திருத்தந்தை சென்றடையும்போது, உள்ளூர் நேரம் திங்கள் இரவு 8 மணி 10 நிமிடங்களாக இருக்கும். அப்போது, இந்திய இலங்கை நேரம் செவ்வாய் அதிகாலை 4.40 மணியாக இருக்கும்.

சிலே நாட்டில் சனவரி 18, வருகிற வியாழன் வரை திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, அன்று மாலையே பெரு நாட்டுக்குச் செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெரு நாட்டில் திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, சனவரி 22ம் தேதி வத்திக்கான் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்குமுன், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1985ம் ஆண்டு பிப்ரவரியில், பெரு நாட்டிலும், 1987ம் ஆண்டு ஏப்ரலில் சிலே நாட்டிலும் திருத்தூதுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.