2018-01-13 15:25:00

சிலே நாட்டிற்கு உரையாடலும், சகிப்புத்தன்மையும் அவசியம்


சன.13,2018. சிலே நாட்டை உடன்பிறப்பு உணர்வுமிக்க தாயகமாகக் கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கு இடையே நன்மதிப்பும், சகிப்புத்தன்மையும் அவசியம் என்று, சந்தியாகோ உயர்மறைமாவட்டம் கூறியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே நாட்டுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இவ்வேளையில், இவ்வெள்ளியன்று, தலைநகர் சந்தியாகோவில் மூன்று கத்தோலிக்க ஆலயங்கள் சமூக விரோதிகளால் குண்டுவீசி தாக்கப்பட்டிருப்பது குறித்து, சந்தியாகோ உயர்மறைமாவட்ட நிர்வாகம் கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனது அமைதியை உங்களுக்கு அளிக்கின்றேன் என்ற இயேசுவின் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே நாட்டிற்கு வழங்கவுள்ளார் என்றும், இச்சூழலில், சிலே நாட்டிற்கு, சகிப்புத்தன்மையும், கலந்துரையாடலும் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்றும், அவ்வறிக்கை கூறுகிறது.

சிலே நாட்டின் அனைத்து கத்தோலிக்கரும், பல்வேறு மதத்தினரும், நன்மனம் கொண்ட அனைவரும், திருத்தந்தையின் பயண நிகழ்வு கொண்டாட்டங்களில் மகிழ்வுடன்  கலந்துகொள்ளுமாறும், சந்தியாகோ உயர்மறைமாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிலே நாட்டின் பெருமளவான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ள சமூக விரோதிகள், தங்களின் வன்செயல்களைக் கைவிட்டு, சிலே நாட்டை உடன்பிறப்பு உணர்வுமிக்க தாயகமாகக் கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு வலியுறுத்தியுள்ளது, சந்தியாகோ உயர்மறைமாவட்ட நிர்வாகம்.

சந்தியாகோ நகரில், ஹங்கேரி நாட்டு புனித எலிசபெத் ஆலயம் உட்பட மூன்று ஆலயங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன. நான்காவதாக, ஏழையான கிறிஸ்து ஆலயம் குண்டுவீச்சால் அச்சுறுத்தப்பட்டவேளை, அது முறியடிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ், அடுத்த குண்டுகள் உங்களின் உடுப்பில் என்று, எழுதப்பட்ட காகிதங்களையும் சமூக விரோதிகள் விட்டுச்சென்றுள்ளனர் என்று, செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.