2018-01-15 15:19:00

இயேசுவைத் தேடி, சந்தித்து, பின்தொடர்வதே, நம் பாதை


சன.15,2018. இயேசுவைத் தேடுவது, அவரைச் சந்திப்பது, பின் அவரைப் பின்தொடர்வது என்பவையே, நம் பாதையாக இருக்க வேண்டும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்கள் என்ற வகையில் நாம் ஒவ்வொருவரும், ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோம், அன்புக்காக, மகிழ்வுக்காக, நல் வாழ்வுக்காக என நம் தேடல்கள் உள்ளன. ஆனால், தந்தையாம் இறைவன் இவையனைத்தையும் தன் மகன் இயேசுவில் நமக்குத் தந்துள்ளார், என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தேடலில், முதலில் பயணம் மேற்கொண்ட முதல் சாட்சியத்தின் பங்களிப்பே அடிப்படையானது' என கூறினார்.

நாம் எத்தனையோ சாதனைகளைப் புரிந்தாலும், எத்தனையோ பேருடன் உறவுகளை வளர்த்தாலும்,எத்தனையோ அனுபவங்களைக் கொண்டிருந்தாலும், இயேசுவுடன் இடம்பெறும் சந்திப்பே, நம் வாழ்விற்கு உண்மையான பொருளை வழங்க முடியும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு பழக்கமாகிப்போய், அதேவேளை, முழு ஈடுபாடின்றி செயல்படும் மத நடவடிக்கைகளை வெற்றி கண்டு, செபத்தில் இயேசுவுடன் நாம் மேற்கொள்ளும் சந்திப்புகளை புதுப்பிக்க நாம் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனைக் குறித்த ஒரு கற்பனையை நமக்குள்ளேயே வளர்த்துக் கொள்வதை விடுத்து, இறைவனைத் தேடி, அவர் இருக்கும் இடத்தில் அவரைக் கண்டுகொள்வோம்' என்றார்.

இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாள், அடுத்த ஆண்டிலிருந்து, செப்டம்பர் மாத்த்தின் இரண்டாம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் எனவும் அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.