2018-01-15 12:14:00

திருத்தந்தை: அன்னியரைச் சந்திக்க மறுக்கும் மனநிலையே பாவம்


சன.15,2018. ஒவ்வொரு நாட்டின் கதவையும் தட்டிக்கொண்டிருக்கும் குடிபெயர்ந்தோர், மற்றும் புலம் பெயர்ந்தோர், இயேசுவைச் சந்திக்க நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு, அதேபோல், புதிய நாடுகளில் அயல்நாட்டவர் காணும் ஒவ்வொரு கதவும், இயேசுவைச் சந்திக்க அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு வழங்கிய மறையுரையில் கூறினார்.

சனவரி 14, இஞ்ஞாயிறன்று, குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் காலை பத்து மணிக்கு திருப்பலியை தலைமையேற்று நடத்தியத் திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

சிறுவன் சாமுவேலை இறைவன் அழைத்த நிகழ்வையும், தன் முதல் சீடர்களை இயேசு அழைத்த நிகழ்வையும் கூறும் இஞ்ஞாயிறு வாசகங்களை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடுவிட்டு நாடு செல்வோரிடையிலும், அன்னியரை வரவேற்போரிடையிலும் நிலவும் அச்சங்களை, தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பேசினார்.

இத்தகைய அச்சங்கள் இருப்பது சாதாரண மனித இயல்பு என்பதையும், இவ்வச்சங்கள் தம்மிலேயே பாவங்கள் அல்ல என்பதையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த அச்சங்களால் ஆள்கொள்ளப்பட்டு, அன்னியரைச் சந்திப்பதற்கு மறுக்கும் நம் மனநிலையே நம்மை பாவத்திற்கு இட்டுச் செல்கிறது என்று எடுத்துரைத்தார்.

இன்றைய நற்செய்தியில், தன் புதிய சீடர்களிடம், "வந்து பாருங்கள்" என்ற அழைப்பை விடுத்த இயேசு, குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் அனைவருக்கும் அதே அழைப்பை வழங்குகிறார் என்றும், ஒவ்வொரு நாட்டிலும் வாழ்வோர், இத்தகைய அழைப்பை அன்னியருக்கு வழங்கவேண்டும் என்பதை இறைவன் விரும்புகிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.