2018-01-15 15:11:00

திருத்தந்தை பயணம் மேற்கொள்ளும் பெரு நாடு, ஒரு கண்ணோட்டம்


சன.15,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 18ம் தேதி மாலை முதல், சனவரி 21ம் தேதி வரை திருத்தூதுப் பயணத் திட்டங்களை நிறைவேற்றும் நாடு பெரு. தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்கில் அமைந்துள்ள பெரு நாட்டின் எல்லைகளாக, வடக்கே ஈக்குவதோர் மற்றும் கொலம்பியாவும், கிழக்கே பிரேசிலும், தென்கிழக்கே பொலிவியாவும், தெற்கே சிலேயும் அமைந்துள்ளன. இந்நாட்டிற்கு மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்நாட்டின் புவியியல் மற்றும் வெப்பநிலை காரணமாக, 21,462 வகையான தாவர மற்றும் விலங்கு உயிரினங்கள் உள்ளன.  இவை, பசிபிக் கடற்கரைப் பகுதியின் விவசாய நிலங்கள், ஆன்டெஸ் மலைப்பகுதி, அமேசான் பருவமழைக் காடுகள், அமேசான் நதி ஆகிய பகுதிகளில் நிறைந்துள்ளன. பெரு நாடு, 16ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், பானமா நாட்டின் San Miguel வளைகுடாவுக்கு அருகில் ஆட்சி செய்த Birú என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. 1522ம் ஆண்டில் இஸ்பானிய நாடுகாண் பயணி Francisco Pizarro, இப்பகுதியைக் கண்டுபிடித்து, பிரு என்பவரின் உடைமைகளைப் பார்த்தபின் அப்பகுதியை பிரு அல்லது பெரு என்றே அழைத்தார்.

பெரு நாட்டுப் பகுதியில், ஏறத்தாழ கி..மு. 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான Norte Chico கலாச்சாரம் உட்பட, பல்வேறு பழங்காலக் கலாச்சாரங்களின் தொட்டிலாக அமைந்துள்ள இந்நாட்டுப் பகுதியில்தான், அமெரிக்காவின் வலிமைவாய்ந்த Inca பேரரசும் ஆட்சி செய்துள்ளது. 16ம் நூற்றாண்டில் இஸ்பானியப் பேரரசு, இப்பகுதியை, கைப்பற்றி, இந்நாட்டின் லீமா நகரை, தன் தென் அமெரிக்க காலனிகளின் தலைநகராக அமைத்தது. José de San Martín, Simón Bolívar ஆகிய இருவரின் இராணுவப் புரட்சிகள் மற்றும், Ayacucho இனத்தவர் மேற்கொண்ட போரினால், பெரு நாடு, 1821ம் ஆண்டில் இஸ்பானியர்களிடமிருந்து விடுதலையடைந்தது. சிலே நாட்டுடன் நடத்திய பசிபிக் போருக்குப் பின்னர், பெரு நாடு, நிலையான, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பை அனுபவித்து வருகிறது. ஆயினும், பெரு நாடு, இருபதாம் நூற்றாண்டில், ஆயுதம் ஏந்திய நிலப்பகுதி மோதல்கள், ஆட்சிக்கவிழ்ப்புகள், சமூகப் பதட்டநிலை, உள்நாட்டு மோதல்கள் போன்ற, பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்களுக்கு உள்ளாகி, ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு, இன்று முன்னேறி வரும் ஒரு நாடாக உள்ளது. வளரும் நாடுகளில் ஒன்றான பெருவில், 50 விழுக்காட்டு மக்கள் ஏழ்மையில் உள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. வேளாண்மை, மீன்பிடித்தல், கனிமவளம், எடுத்தல், துணி உற்பத்தி, குறிப்பாக, வெள்ளி மற்றும் தங்கச் சுரங்கத் தொழில்கள் போன்றவை இந்நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் உதவுகின்றன.

பெரு நாட்டின் தலைநகரம் லீமா. இந்நாட்டில் இஸ்பானியம், quechua, aymara ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாகும். இந்நாட்டில், கத்தோலிக்கர் 81 விழுக்காட்டினரும், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையினர் 13 விழுக்காட்டினரும், கடவுள் நம்பிக்கையற்றவர் 3 விழுக்காட்டினரும், ஏனைய மதத்தவர் 3 விழுக்காட்டினரும் உள்ளனர். ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் போன்று, பெரு நாட்டிலும், இஸ்பானிய காலனி ஆதிக்கத்தோடு நற்செய்தியும் பரவியது. 1532ம் ஆண்டில்,  Francisco Pizarro என்பவர் தலைமையிலான இராணுவம், Piuraவை உருவாக்கி, அங்கே முதல் சிலுவையை ஊன்றியது. அந்த இடத்தில் முதன்முதலாக திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. 1671ம் ஆண்டில், லீமா நகர் புனித ரோஸ் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். இப்புனிதர், 1670ம் ஆண்டிலே, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும், பூர்விகஇனத்தவரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டில் திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, சனவரி 22, திங்கள் பிற்பகல் 2.15 மணிக்கு உரோம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பெரு நாட்டின் தென்பகுதியில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், Arequipa, Ica, Ayacucho ஆகிய நகரங்களில் குறைந்தது 65 பேர் காயமுற்றுள்ளனர் மற்றும் இருவர் இறந்துள்ளனர். இவ்வேளையில் இந்நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகச் செபிப்போம். மேலும், சிலே நாட்டின் சந்தியாகோ நகரில் கடந்த வெள்ளியன்று மூன்று ஆலயங்கள் சமூக விஷமிகளால் குண்டுவீசி தாக்கப்பட்டுள்ளன. எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதுபோன்று, சிலே மற்றும் பெரு நாடுகளில் நடைபெறும் திருத்தூதுப்பயணத்திற்காக உருக்கமாகச் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.