2018-01-16 15:11:00

சந்தியாகோ O’Higgins பூங்காவில் திருத்தந்தை திருப்பலி


சன.16,2018. La Moneda மாளிகையில் சந்திப்பை முடித்து, அங்கிருந்து 22 கிலே மீட்டர் தூரத்திலுள்ள O’Higgins பூங்காவுக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். சிலே நாட்டைக் கட்டியெழுப்பிய தந்தையர்களுள் ஒருவரான Bernardo O’Higgins என்பவரின் பெயரால் இந்தப் பூங்கா அழைக்கப்படுகின்றது. இராணுவம் பயன்படுத்துவதற்காக, 1845ம் ஆண்டில் அரசு இவ்விடத்தை வாங்கியது. இந்தப் பூங்காவில், இன்றும், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 19ம் தேதி இராணுவ அணிவகுப்பு நடைபெறுகின்றது. இவ்விடம், 1873ம் ஆண்டில் பூங்காவாக மற்றப்பட்டது. சிலே நாட்டில் இரண்டாவது பெரிய பூங்காவாகிய இதில், ஏறத்தாழ ஆறு இலட்சம் பேர் அமரலாம். இந்தப் பூங்காவில் திறந்த காரில் விசுவாசிகள் மத்தியில் வலம்வந்த திருத்தந்தை, அமைதி மற்றும் நீதி என்ற தலைப்பில் திருப்பலியை ஆரம்பித்தார். 'அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்' என உரைத்த இயேசு, இன்று நம்மை நோக்கி, 'புதிய சிலே நாட்டிற்காக, புதிய நாளுக்காக, துன்புற்று பணிபுரியும் நீங்கள் பேறுபெற்றோர்' என கூறும்போது எவ்வளவு சிறப்பாக இருக்கும்! அமைதியைக் கட்டியெழுப்புவது என்பது, நம் அயலாரை இந்த மண்ணின் புதல்வர், புதல்விகளாக நோக்கி, உறவுகளைப் பேணி பாதுகாப்பதாகும் என்று, இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரையில் கூறினார். இம்மறையுரைக்குப் பின்னர், திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்த கார்மேல் அன்னை திருப்படத்திற்கு மகுடம் அணிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியை திருத்தந்தை நிறைவு செய்தபோது உள்ளூர் நேரம் பகல் 12 மணி 15 நிமிடமாகும். அப்போது இந்திய நேரம் இரவு 8.45 மணியாகும். இத்திருப்பலியை நிறைவேற்றிய பின்னர், சந்தியாகோ நகர் திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிறிது ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த திருப்பீட தூதரகம் சில நாள்களுக்கு முன்னர், சில சமூக விரோதிகளால், சில நிமிடங்கள் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செவ்வாய் மாலை 3.40 மணிக்கு சந்தியாகோ நகர் திருப்பீடத் தூதரகத்திலிருந்து, 11 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள San Joaquin பெண்கள் சிறைக்குச் சென்று கைதிகளைச் சந்திப்பது, மாலை 5.15 மணிக்கு சந்தியாகோ பேராலயத்தில் சிலே நாட்டின் அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவ மாணவர் ஆகியோரைச் சந்திப்பது, சிலே ஆயர்களைச் சந்திப்பது, இயேசு சபை புனித அல்பெர்த்தோ ஹுர்த்தாதோ திருத்தலம் செல்வது, இயேசு சபையினரைச் சந்திப்பது ஆகியவை இச்செவ்வாய் தின பயணத்திட்டத்தில் உள்ளன. San Joaquin பெண்கள் சிறையில் 620 பெண் கைதிகள் உள்ளனர். இப்பெண் கைதிகள், கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் ஏனைய குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவிப்பவர்கள்.

சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொண்டுள்ள இந்த ஆறு நாள் திருத்தூதுப் பயணம், திருத்தந்தை இலத்தீன் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் ஆறாவது திருத்தூதுப் பயணமாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணத்திற்காகத் தொடர்ந்து செபிப்போம். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1987ம் ஆண்டு சிலே நாட்டிலும், 1985 மற்றும் 1988ம் ஆண்டுகளில் பெரு நாட்டிலும் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.