2018-01-16 14:18:00

திருத்தந்தையின் மறையுரை – இறைமக்களின் பணி, அமைதிக்கானது


சன.16,2018. அன்பு சகோதர, சகோதரிகளே, 'இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு' என துவங்குகிறது, நாம் இன்று வாசித்த நற்செய்தி வாசகம். இயேசு தன்னைப் பின்தொடர்ந்தோரை உற்றுநோக்கும் அதேவேளையில், அவர்களோ அவரது முகத்தில் தங்கள் எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் எதிரொலிப்பதைக் காண்கின்றனர். இந்த சந்திப்பு, ‘பேறுபெற்றோர்’ என்ற தொகுப்பு உருவாக்கப்பட வழியாகிறது. பேறுபெற்றோர் என்பவர்கள், மகிழ்ச்சியான வாழ்வைத் தேடும் மக்களின் இதயங்களை நேரடியாக சந்திக்கும் இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்திலிருந்து பிறந்தவர்களாக உள்ளனர். துன்பத்தை அனுபவிப்பது என்ன என்பதை அறிந்த மக்களுக்கும், தங்கள் கால்களின் கீழேயே உலகம் நழுவிப்போவதன் வலியை உணர்ந்த மக்களுக்கும், தங்கள் வாழ்வில் சம்பாதித்தவற்றையெல்லாம் இழந்து, தங்கள் கனவுகள் கலைக்கப்பட்டு, பூஜ்யமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கும், தங்கள் வாழ்வைக் கட்டியெழுப்ப எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்பது தெரிந்தவர்களுக்கும், பேறுபெற்றவர்கள் என்று இயேசு வழங்கிய உரை, பொருள் நிறைந்தது. ஆம். அனைத்தையும் புதிதாக கட்டியெழுப்பத் தெரிந்த சிலே மக்களுக்கும், இது பொருள் நிறைந்த உரை.

குற்றம் கண்டுபிடிக்கும் மனநிலையின் கனிகளல்ல, பேறுபெற்றோர் எனும் புண்ணியங்கள். மாறாக, அவை எக்காலத்திலும் நம்பிக்கையை இழக்காத இரக்கமுடைய இதயத்திலிருந்து பிறந்தவை. எதிர்மறை எண்ணங்களையும் சோர்வையும் உதறித் தள்ளிவிட்டு, ஒரு புதிய நாள்போல், நம்பிக்கையை அனுபவிக்கும் இதயத்திலிருந்து பிறந்தவை அவை.

ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், துன்புறுத்தப்படுவோர், பொறுமையுடையோர், இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என இயேசு இம்மக்களை உரைப்பதன் வழியாக, மாற்றம் உருவாக்கவல்ல இறைவன் சக்தியிலும், தம் சகோதர சகோதரிகளிலும், நம்பிக்கை கொண்டிராத மக்களின் செயலற்ற நிலையை அகற்ற முன்வருகிறார் இயேசு. நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போவது, நாம் அனுபவிக்கும் சுகமான வாழ்வுக்குள் நம்மை மறைத்துக்கொள்வது, மற்றவர்களை ஒதுக்கி வாழ்வது, பிரச்னைகளிலிருந்து தப்பி ஓடிவிட்டால், சுகமான வாழ்வைக் கொண்டிருக்கலாம் என நம்புவது, போன்ற எதிர்மறை எண்ணங்களை தூக்கியெறிய உதவும் விதமாக, பேறுபெற்றோர் குறித்த புண்ணியங்களை எடுத்துரைக்கிறார் இயேசு. இறைவனின் ஆவியால் தொடப்பட்டு வழிநடத்தப்பட அனுமதிக்கும் மக்களுக்கு, ஒரு புதிய நாளை திறக்கின்றன இந்த பேறுபெற்றோர் புண்ணியங்கள்.

 'அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்' என உரைத்த இயேசு, இன்று நம்மை நோக்கி, 'புதிய சிலே நாட்டிற்காக, புதிய நாளுக்காக, துன்புற்று பணிபுரியும் நீங்கள் பேறுபெற்றோர்' என கூறும்போது எவ்வளவு சிறப்பாக இருக்கும்!

ஒப்புரவிற்காக உழைப்போர் பேறுபெற்றோர். மற்றவர்கள் மகிழ்வாக வாழ, தங்கள் கைகளை அழுக்காக்குவோர் பேறுபெற்றோர். பிரிவினைகளை விதைக்காதோர் பேறுபெற்றோர். உங்களுக்கு அமைதி வேண்டுமா? அமைதிக்காகப் பணிபுரியுங்கள்.

'அமைதி வேண்டுமெனில், நீதிக்காக உழையுங்கள்' என சந்தியாகோவின் புகழ்பெற்ற ஆயர், கூறிய வார்த்தைகளை இங்கு எடுத்துரைக்கிறேன். நீதி என்றால், ஒவ்வொருவரையும் நம்மைப்போல் நடத்துவதாகும். (Cardinal Raul Silva Henríquez)  

துன்பத்திலிருப்போரை, தன் மக்களுக்குரிய மாண்புடன் நடத்தப்படாதவரை அணுகிச்சென்று உதவுவதே, அமைதியை விதைப்பதாகும். புனித அல்பெர்த்தோ ஹுர்த்தாதோ (St Alberto Hurtado) அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல், “தவறு செய்யாமலிருப்பது, நல்லது. ஆனால் நன்மை எதுவுமே செய்யாமலிருப்பது, மிகப்பெரும் தவறு.”

அமைதியைக் கட்டியெழுப்புவது என்பது, நம் அயலாரை இந்த மண்ணின் புதல்வர், புதல்விகளாக நோக்கி, உறவுகளைப் பேணி பாதுகாப்பதாகும். இயேசு எடுத்துரைத்த பேறுபெற்றோர் வரிகளை நாம் வாழ்வில் கடைபிடிக்க அன்னை மரியா உதவிசெய்வதால், இந்நகரின் ஒவ்வொரு மூலையிலும், 'அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்' என்ற மெல்லிய குரல் ஒலிப்பதை நாம் கேட்கமுடியும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.