சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

மக்களின் முன்னேற்றம் திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை

தெமுகோ விமானத்தளத்தில், திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை - AFP

18/01/2018 15:38

சன.18,2018. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, காலை வணக்கம். உங்களுக்கு அமைதி உரித்தாகுக. (லூக்கா 24:36) தென் அமெரிக்கக் கண்டத்தின் அழகுமிகுந்த அரவுக்கனீயா (Araucanía) நாட்டைக் காணவைத்த இறைவனுக்கு நன்றி. இங்கு வந்திருக்கும் அனைத்து இன மக்களையும் அன்புடன் வாழ்த்துகிறேன். குறிப்பாக, மபுக்கே, இரபனுயி, அய்மாரா மற்றும் மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

சுற்றுலாப் பயணிகளின் கண்ணோட்டத்தில் இந்த நிலம் அழகானதாகத் தெரியலாம். ஆனால், இந்த மண்ணில் செவியைப் பதித்துக் கேட்டால், "பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை" ஒருவர் கேட்க முடியும். இந்த மண்ணில் நாள்தோறும் அநீதிகளுக்கு உட்பட்டு, துன்புற்று இறந்தோருக்காகவும், இங்கு வாழ்வோருக்காகவும் இத்திருப்பலியை நாம் ஒப்புக்கொடுக்கிறோம்.

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!" (யோவான் 17:21) என்று, இயேசு, விண்ணகத் தந்தையிடம் வேண்டினார் என்பதை இன்றைய நற்செய்தியில் வாசித்தோம். எல்லாரும் ஒன்றாய் இருப்பதற்காக இயேசு எழுப்பிய செபத்திற்கு எதிராக உருவாகும் சோதனைகள் அதிகம்.

1.தவறான ஒருங்கிணைப்பு

ஒன்றித்திருப்பது என்பது, ஒரே மாதிரியாக இருப்பது என்று கூறும் முதல் சோதனையை நாம் எதிர்க்கவேண்டும். வேறுபாடு ஏதுமின்றி, எல்லாரும், ஒரே மாதிரியாக, ஒரே வழியில் சிந்திப்பவர்களாக, இருக்கவேண்டும் என்று இயேசு மன்றாடவில்லை.

இந்நாட்டில் வாழும் ஒவ்வோர் இனத்தவரும், தங்களுக்கே உரித்தான கலாச்சாரத்துடன், கருத்தியல்களுடன், நாட்டின் பொதுநலனுக்கு, தங்களை அர்ப்பணிப்பதே உண்மையான ஒன்றிப்பு. ஒருவர் ஒருவருக்குச் செவிமடுத்து, ஒருவர் ஒருவரை மதித்து, உருவாவதே, நம் மக்களுக்கு தேவையான ஒன்றிப்பு. இத்தகைய ஒன்றிப்பின் சிற்பிகளாக எம்மை உருவாக்கும் என்று நாம் செபிப்போம்.

2. ஒருங்கிணைப்பின் ஆயுதங்கள்

ஒருங்கிணைப்பையும், ஒப்புரவையும் உருகுலைக்கும் இருவகை வன்முறைகள் உள்ளன.

முதலாவது, செயல்வடிவம் பெறாமல், வார்த்தை வடிவில் மட்டும் தங்கிவிடும் ஒப்பந்தங்கள். இந்த ஒப்பந்தங்கள், தெளிவான திட்டங்கள் பலவற்றை உருவாக்கி, அவற்றை செயல்படுத்தாமல் போவது, கையால் எழுதியவற்றை, முழங்கையால் அழித்துவிடுவதைப் போல் உள்ளது. இரண்டாவது, ஒரு கலாச்சாரத்தை நிலைநாட்ட, ஏனைய கலாச்சாரங்களையும், அவற்றைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடும் வன்முறை.

இவ்விரு வன்முறைகளும், எரிமலையிலிருந்து வெளியேறும் நெருப்புக்குழம்பைப் போன்றது. அது செல்லுமிடமெல்லாம், எதுவும் வாழமுடியாது. இந்த வன்முறைகளுக்கு எதிராக, உரையாடல் கலாச்சாரத்தை வளர்ப்பதில் நாம் சோர்வடையாமல் இருப்போம். எனவே, ஒன்றிப்பின் சிற்பிகளாக எம்மை உருவாக்கும் என்ற நம் வேண்டுதல், உரத்தக் குரலில் எழட்டும்.

மபுக்கே கலாச்சாரத்தின் பழம்பெரும் ஞானம் சொல்லும் Küme Mongen, அதாவது, 'நல்ல வாழ்வு' வாழ்வதற்கு அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே, அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இந்த மண்ணின் மைந்தர்களுக்காக, அவர்களின் குழந்தைகளுக்காக, நாம் இயேசுவோடு இணைந்து, விண்ணகத் தந்தையை மன்றாடுவோம்: "நாங்கள் எல்லாரும் ஒன்றாயிருப்போமாக; எம்மை, ஒன்றிப்பின் சிற்பிகளாக உருவாக்கும்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

18/01/2018 15:38