2018-01-18 10:05:00

ஆயர்களுடன் சந்திப்பு - நாமும் இறைமக்களின் ஒரு பகுதியே


சன.17,2018. சகோதர ஆயர்களே, உங்கள் அனைவருக்கும் நன்றிகூறும் அதே வேளையில், இவ்வாண்டு, தன் ஆயர் திருநிலைப்பாட்டின் 60வது ஆண்டை சிறப்பிக்கும் ஆயர் பெர்னார்தினோ பிஞ்ஞேரோ கர்வாலோ அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகிலேயே இன்று வயதான ஆயர் அவரே.

துறவறத்தாரை சந்தித்து முடித்த கையோடு, உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஏனெனில், நம் முக்கியப் பணிகளுள் ஒன்று, துறவறத்தார் மற்றும் அருள்பணியாளர்களோடு நெருக்கமாக இருப்பதாகும். ஆடுகளை பாதுகாக்க வேண்டிய ஆயர், அக்கறையின்றி அலைந்து திரிந்தால், ஆடுகள் ஓநாய்க்கு இரையாகிவிடும். தன் அருள்பணியாளர்களுடன் தந்தைக்குரிய பண்போடு செயல்பட வேண்டியது ஆயரின் கடமை.

கடவுளின் மக்களாக இருக்கும் உணர்வை விசுவாசிகளிடம் ஊட்டவேண்டியது நம் பணியாகிறது. ஏனெனில், யாரோடும் இணையாத ஓர் அநாதை உணர்வை கொண்டிருப்பது இன்றைய உலகம் சந்திக்கும் பிரச்சனை. இதே உணர்வு குருத்துவ சமுதாயத்திலும் ஊடுருவக்கூடும். இறைவனின் புனித மக்களில் நாமும் ஒரு பகுதி என்பதை மறந்துபோகிறோம். திருஅவை என்பது, இன்றும், இனி வரும் எக்காலத்திலும் அர்ப்பணமாக்கப்பட்ட ஆண், பெண், அருள்பணியாளர்கள், ஆயர்கள் என்ற உயர்குடி சமுதாயம் அல்ல. நாம் மக்களின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு இல்லாமல், நமது வாழ்வை, அழைப்பை, பணியை பாதுகாக்க இயலாது. நாம் பணியாளர்களேயன்றி, முதலாளிகள் அல்ல. இதை மறந்துவிட்டால், நம் இறை அழைத்தல்கள் கேலிக்கூத்தாகி விடும்.

திருஅவை, ஒரு சிலருக்கு மட்டும் அன்றி, அனைத்து இறைமக்களுக்கும் சொந்தமானது. இதனை, அருள்பணியாளர்களின் பயிற்சியின்போது சொல்லிக் கொடுப்போம். அவர்கள், இறைமக்களின் பணிக்கென தயாரிப்பவர்கள். இறைமக்களின் அருகில் இருந்து, பிறரன்பு சேவைகள் வழியாகவும், திருஅவை கோட்பாடுகள், நன்னெறி விழுமியங்கள், அருளடையாளங்கள் வழியாகவும், இறைமக்களுக்கு பனியாற்றவேண்டியது குறித்து குருத்துவப் பயிற்சி பெறுவோர் கற்றுக்கொள்ள வேண்டும். இறைமக்களுடன் உடன்பிறந்த உணர்வை வளர்த்துக்கொள்ள அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

கனவுகாணுங்கள். கனவு காணும் கொடையை தூய ஆவியானவரிடம் கேளுங்கள். அனைத்தையும் நன்முறையில் மாற்றியமைப்பதற்கு பணியாற்றுவது குறித்து கனவு காணுங்கள். அதன் வழி, சிலே நாட்டில் நற்செய்தி அறிவித்தல் தொடரட்டும்.

அன்னை மரியாவின் பாதுகாப்பில் நம்மை ஒப்படைப்போம். நம் அருள்பணியாளர்களுக்காகவும், துறவறத்தாருக்காகவும், நாமும் ஒரு பகுதியாக இருக்கும் இறைமக்களுக்காகவும் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.