2018-01-18 10:09:00

இயேசு சபை புனிதர், அல்பெர்த்தோ திருத்தலத்தில் திருத்தந்தை


சன.17,2018. சந்தியாகோ விண்ணேற்பு பேராலயத்தின் திருப்பூட்டறையில், சிலே நாட்டு ஆயர்களுடன் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட பின்னர், அங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இயேசு சபை புனிதர், அல்பெர்த்தோ ஹுர்த்தாதோ திருத்தலம் சென்று தனியே செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 2005ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி புனிதராக அறிவிக்கப்பட்ட புனித ஹுர்த்தாதோ, ஏழைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், அச்சமின்றி குரல் எழுப்பி உழைத்தவர். இவர், சிலே நாட்டின் இரண்டாவது புனிதராவார். 1901ம் ஆண்டு சனவரி 22ம் தேதி சிலே நாட்டின் Viña del Mar என்ற ஊரில் பிறந்த புனித அல்பெர்த்தோ ஹுர்த்தாதோ, நான்கு வயதில் தந்தையை இழந்தார். அதன்பின்னர், குடும்பக் கடனை அடைப்பதற்காக, இவரது தாய், இவரை, குறைந்த விலைக்கு விற்றார். இதன் விளைவாக, அல்பெர்த்தோவும், அவரது சகோதரரும், அவர்களின் உறவினர்களுடன் வாழ்ந்தனர். ஒவ்வொரு குடும்பமாக இவர்கள் மாற்றப்பட்டனர். அதனால், இளம் வயதிலிருந்தே வறுமையின் வலியை நன்கு அனுபவித்திருந்தார் அல்பெர்த்தோ. 1917ம் ஆண்டில் கல்வியை முடித்த இவர் இயேசு சபையில் சேர விரும்பினார். ஆனால், இவரது தாயையும் தம்பியையும் காப்பாற்றும் பொறுப்பு இவருக்கு இருந்ததால், இவர் இயேசு சபையில் சேரும் நாட்களைத் தள்ளிப்போட்டனர். மாலை நேரங்களில் கடினமாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றினார். அதே நேரம் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இவர் படித்தார். ஏழைகள் மீது அக்கறையுள்ளவராக, ஞாயிற்றுகிழமைகளில் தவறாமல் ஏழைகளைச் சந்தித்தார். நாட்டின் கட்டாய இராணுவ சேவையால் இவரது கல்வி தடைபட்டது. 1923ம் ஆண்டில் பட்டப் படிப்பை முடித்து, சிலே நாட்டில் இயேசு சபையில் இவர் சேர்ந்தார். அர்ஜென்டீனா சென்று, மனிதம் மற்றும் மனித சமுதாயம் பற்றியும், இஸ்பெயின் சென்று மெய்யியலும், இறையியலும் கற்றார். 1931ம் ஆண்டில் இஸ்பெயினில் இயேசு சபை தடைசெய்யப்பட்டதால், இவர் பெல்ஜியம் சென்று படிப்பைத் தொடர்ந்தார். 1933ம் ஆண்டில் அருள்பணியாளராக இவர் திருப்பொழிவு செய்யப்பட்டார். 1936ம் ஆண்டு சனவரியில் சிலே திரும்பிய இவர், சந்தியாகோ கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் மறைக்கல்வி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். “சிலே ஒரு கத்தோலிக்க நாடா?” என்று, 1941ம் ஆண்டில் இவர் எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றது. திருஅவையின் சமூகப் போதனையின் அடிப்படையில், 1947ம் ஆண்டில், சிலே வர்த்தக கழகத்தை ஆரம்பித்தார் இப்புனிதர். ஏழைகளுக்காகவே உழைத்த புனித அல்பெர்த்தோ, புற்றுநோயால் தாக்கப்பட்டு, 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

புனித அல்பெர்த்தோ திருத்தலத்தில் செபித்தபின், இயேசு சபையினரையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின்னர் சந்தியாகோ திருப்பீடம் தூதரகம் சென்ற திருத்தந்தை, சிலே நாட்டு அருள்பணியாளர்களால் பாலியல் முரையில் பாதிக்கப்பட்டுள்ள ஆறுபேரைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு, இப்பயணத்திட்டத்தில் ஏற்கனவே குறிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இச்சந்திப்புடன் இச்செவ்வாய் தின பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.