2018-01-18 16:07:00

திருத்தந்தை - இளையோரின் கனவுகள், சிலே நாட்டுக்காக...


சன.18,2018. அன்பு நண்பர்களே, மைப்பூவில் (Maipú) உள்ள கார்மேல் அன்னை மரியா திருத்தலத்தில் இச்சந்திப்பு நிகழ்வது குறித்து மிக்க மகிழ்ச்சி. சிலே நாட்டைக் குறித்து கனவுகாணும் இளையோருடன், கார்மேல் அன்னை மரியாவும் உடன் நடக்கிறார்.

ஒவ்வொரு நாட்டையும் நாம் 'தாய் நாடு' என்று அழைக்கிறோம். ஒவ்வொருவரும் தங்கள் தாயை நேசிப்பதுபோல் நாட்டையும் நேசிக்கவேண்டும் என்பதை, 'தாய் நாடு' என்ற சொல் நினைவுறுத்துகிறது. தாய் நாட்டைக் குறித்த கனவுகள், இந்த மண்மீது காலூன்றி நிற்பதில் ஆரம்பமாகின்றன. எனவே, சிலே நாட்டை நேசியுங்கள், உங்களின் சிறந்த கனவுகளை, திறமைகளை சிலே நாட்டுக்காக அர்ப்பணியுங்கள்.

என்னுடைய பணிவாழ்வில் சந்தித்த இளையோர், கனவுகளையும், சிறந்த கருத்துக்களையும் சுமந்திருந்ததைக் கண்டிருக்கிறேன். 'இளமையில் கனவுகாண்பது சரிதான்; போகப்போக அது சரியாகிவிடும்' என்று வயதில் முதிர்ந்தோர், கனவுகளைத் தடுக்கும் வண்ணம் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதீர்கள். குறிப்பாக, இவ்வுலகில் உள்ள அநீதிகளை மாற்றமுடியாது என்று கூறி, உங்கள் கனவுகளைக் குறைக்கச் சொல்பவர்களின் கூற்றை நம்பத் தேவையில்லை. மாற்றங்களுக்குப் பதிலாக, இப்போது நிலவும் ஊழலை, அநீதியைச் சகித்துக்கொள்வதே மேல் என்று கூறுபவர்களை நம்பாதீர்கள். உங்கள் கனவுகளோடும், தெளிவற்ற கலக்கங்களோடும் முன்னேறிச் செல்லுங்கள்.

இளையோரின் முழுமையான உண்மைநிலையை மனதில்கொண்டு, உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளது. இளையோரை மையப்படுத்திய மாமன்றம், நம்பிக்கைதரும் மாமன்றமாக அமையவேண்டும் என்பது என் விருப்பம். இளையோரின் கருத்துக்கள், வத்திக்கானை அடைவதற்குள், பல்வேறு வழிகளில் வடிகட்டப்படும் என்பதை நான் அறிவேன். எனவேதான், இவ்வகைக் கூட்டங்களிலும், இன்னும் ஆயர்கள் மாமன்றத்திற்கு ஏற்பாடு செய்யும் வகையில் குருத்தோலை ஞாயிறையொட்டி நடைபெறும் இளையோர் கூட்டங்களிலும் நீங்கள் தயங்காமல் வெளிப்படுத்தும் கருத்துக்களைக் கேட்கவிழைகிறேன்.

இளையோராகிய நீங்கள், செல்லிடப்பேசி, அதனை இயக்கும் 'பாட்டரி', இணையதள 'Wi-Fi' தொடர்பு, தொடர்புகளுக்கு அனுமதி வழங்கும் 'password' எனப்படும் கடவுச்சொல் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்கள்.

சிலே நாட்டுப் புனிதர், அல்பெர்த்தோ ஹுர்த்தாதோ அவர்கள் பயன்படுத்திய கடவுச்சொல் மிக எளிதானது: "கிறிஸ்து இவ்விடத்தில் என்ன செய்வார்?" என்பதே அவர் அடிக்கடி எழுப்பிய கேள்வி. உங்கள் வாழ்வின் பல்வேறு சூழல்களில், கல்லூரிகளில், பணியிடங்களில், நீங்கள் செபிக்கும்போது, விளையாடும்போது, நடனமாடச் செல்லும்போது, "கிறிஸ்து இவ்விடத்தில் என்ன செய்வார்?" என்ற கேள்வியை, கடவுச்சொல்லாகப் பயன்படுத்தலாம். எந்த ஒரு கடவுச்சொல்லையும் அடிக்கடி பயன்படுத்தினால் மட்டுமே அது நம் நினைவில் ஆழமாகப் பதியும். எனவே, "கிறிஸ்து இவ்விடத்தில் என்ன செய்வார்?" என்ற கடவுச்சொல்லை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

அன்பு நண்பர்களே, உங்கள் சுகமானச் சூழல்களைவிட்டு துணிவுடன் வெளியேறிச் செல்லுங்கள். உங்கள் நண்பர்களையும், புதியவர்களையும், பிரச்சனைகளில் சிக்கியிருப்போரையும் சந்திக்கச் செல்லுங்கள். சாலையோரத்தில் தேவையில் இருப்போரைக் கடந்து செல்லாத நல்ல சமாரியர்களாக இருங்கள். கிறிஸ்துவின் சிலுவையைச் சுமக்க உதவிய சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோனாக இருங்கள். தன் அன்புக்குரிய இயேசுவை மிகுந்த ஆர்வத்துடன் தேடிய மகதலா மரியாவாக இருங்கள். இறைவனின் விருப்பத்தை மகிழ்வுடன் ஏற்ற அன்னை மரியாவின் திறந்த உள்ளத்தைக் கொண்டிருங்கள். எனக்காக செபிக்க மறவாதீர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.