2018-01-18 09:54:00

திருத்தந்தை : சிலே அருள்பணியாளர்கள், ஆயர்கள் சந்திப்பு


சன.17,2018. சந்தியாகோ நகரின் Armas வளாகத்தில், வத்திக்கான் மற்றும் சிலே நாட்டுக் கொடிகளை ஆட்டிக்கொண்டு, வெள்ளமெனக் கூடியிருந்த மக்கள் மத்தியில் திறந்த காரில் வந்து, மக்களையும், சிறாரையும் ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். காரைவிட்டு இறங்கியதும் சந்தியாகோ மாநகரின் மேயரையும் சந்தித்து கைகுலுக்கினார் திருத்தந்தை. அதன்பின் சந்தியாகோ விண்ணேற்பு பேராலயம் சென்ற திருத்தந்தை, சிலே நாட்டின் அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவ மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்தார். இப்பேராலயம், 1648, 1657 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற நிலநடுக்கங்களால் சேதமடைந்தது. பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, 1775ம் ஆண்டில் அர்ச்சிக்கப்பட்டது. இப்பேராலயத்தில் தன்னிடம் கொடுக்கப்பட்ட மலர்க்கொத்தை அன்னை மரியாவுக்கு காணிக்கையாக்கினார், திருத்தந்தை. அங்கு நடைபெற்ற வழிபாட்டில், முதலில் சந்தியாகோ கர்தினால் ரிக்கார்தோ எஸ்ஸத்தி ஆந்த்ரெல்லோ அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தையும் உரை வழங்கினார். திருத்தூதர் பேதுரு மற்றும், முதல் கிறிஸ்தவ சமூகத்தின் அனுபவங்களை எடுத்துச்சொல்லி, எவ்வளவு கடின இதயம் கொண்ட மனிதரும் இயேசுவைச் சந்திப்பதற்கு அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் தங்களை அர்ப்பணிக்குமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நிகழ்வுக்குப் பின்னர், சந்தியாகோ பேராலயத்தின் திருப்பூட்டறையில் சிலே நாட்டின் ஏறத்தாழ ஐம்பது ஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பொதுநிலை விசுவாசிகள், பியூன்களோ அல்லது வேலையாட்களோ அல்ல, நாம் என்னென்ன சொல்கிறோமோ அவற்றையெல்லாம் திருப்பிச்சொல்லும் கிளிகளாக அவர்கள் செயல்பட முடியாது. ஆயர்கள், இறைமக்கள் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்றுரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சிலே நாட்டில் ஐந்து உயர்மறைமாவட்டங்களும், இருபது மறைமாவட்டங்களும் உள்ளன. 31 செ.மீ உயரமுடைய வெள்ளியிலான சிலுவை ஒன்றை ஆயர்கள் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தனர். பாப்பிறை சிலுவை என அழைக்கப்படும் இதுபோன்ற சிலுவை ஒன்றை, சிலே ஆயர்கள், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களுக்கும் கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.